22 ஜன., 2009

நானும் கடவுளும்

நான் பிறக்குமுன்பே ஜோசியக்காரன் நான் பூர்விக வீட்டில் பிறந்தால் அண்ணனுக்கு ஆகாது என்று சொன்னான் என்பதற்காக எங்கள் சொந்த வீட்டை விட்டு அம்மாவின் அப்பா கொடுத்த (சும்மாதான்) இடத்தில் வீடு கட்டிக்கொண்டு (இதுவும் தாத்தாவின் உபயம்தான்)வந்துவிட்டார்கள்..

பிறந்து ஒரு வருடத்தில் என்னை பழனி முருகனுக்கு தத்து கொடுத்துவிட்டனர் (அப்பவே தண்ணி தெளிச்சு விட்டாச்சு).
அதனால் அப்பாவோ ,அம்மாவோ நான் தப்பு செய்யும்போது அடித்தால் ..ஐயோ முருகா ..நீ பார்த்துக்கோ .. என்று சாபம் கொடுப்பேன் ..

கொஞ்சம் வால் முளைத்தவுடன் ..என்னுடைய வீட்டை சுற்றியும் இருக்கிற அநேக வீடுகள் மாமன் ,மச்சான் வீடுகள்தான் அங்கு உள்ள பெண்டுகளுடந்தான் எப்போதும் விளையாடுவேன் (அப்பா ,அம்மா விளையாட்டெல்லாம் இல்லங்க ) பெரும்பாலும் கோவில் கட்டி அதற்க்கு கும்பாபிஷேகம் ,திருவிழா பண்ணுவோம் .. வீட்டில் காசு கேட்டு தொந்தரவு செய்வதால் நல்லா பாட்டு விழும் .. மற்றபடி தேவையான பொருட்களை அவங்கவங்க தெறமைக்கு தக்கன மாதிரி ஆட்டைய போட்டுட்டு வருவாங்க ...

அஞ்சாப்புக்கு (ஐந்தாம் வகுப்பு ) பிறகு செட்டு மாறிடுச்சு ..அப்புறம் பம்பரம் ,கபடி ,தட்டுகோடு ,கிட்டிபுள்ளு ,விளயடுரதுக்கே நேரம் சரியாபோகும் ..இடையில் ஜூனுக்கு பிறகு ஆத்துல தண்ணி வந்துரும் ..அப்புறம் என்ன ஸ்கூல் விட்டு வந்தவுடன் நேரா ஆத்துக்குதான் அங்க போனவுடன் டவுசர கழட்டி கரையில் போட்டுவிட்டு இருட்டரவரைக்கும் ஒரே கும்மாளம்தான் ...நம்மளோட தோஸ்துல தஞ்சாவூரானும் ஒருத்தன் www.thanjavuraan.blogspot.com

சிங்கப்பூர் வந்தபிறகும் அடிக்கடி கோவிலுக்கு போவதுண்டு ,மறுபடியும் ஒரு ஜோசியக்காரனின் அறிவுரைப்படி சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயனுக்கு விரதம் இருக்கும்படி அம்மாவின் கடிதம் வந்தது ..

சிங்கபூரில எப்படி விரதம் இருக்கிறது ..ரொம்ப கஷ்டம் ...சீனங்க கீரையிலகூட நெத்தலி போட்டுத்தான் சமைப்பாங்க ..எனவே காலையில இருந்து சாப்பிடாம இருந்துட்டு சாயந்தரம் தேக்கா வந்து காளியம்மன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயனை வணங்கிவிட்டு கோமள விலாசில் சைவ சாப்பாடு சாப்பிட்டு விரதம் முடிப்பேன் ஆனால் சனிக்கிழமை லீவாக இருந்து நண்பர்களை சந்திக்க நேர்ந்துவிட்டால் விரதத்தை ஒருவாரம் ஒத்தி வைத்துவிடுவேன் இப்படியாக பதினோரு வாரம் இருக்கவேண்டிய விரதம் மாதக்கணக்கில் நீண்டது ..

1995-ல் ஊர் வந்தவுடன் அம்மா வேண்டுதலின்படி எங்க ஊர் மாரியம்மனுக்கு காவடி எடுத்தேன் ..எனக்கு நண்பர்கள் அதிகம் ..அதிலும் சிங்கப்பூர் ரிட்டன் வேறு .. எல்லோருக்கும் தண்ணி ..பட்டை.,பிராந்தி ,விஸ்கி ஆறாக ஓடியது .. தண்ணில அவங்க போட்ட ஆட்டத்துல மாரியம்மனே அன்னைக்கு ஊரே விட்டு ஓடியிருக்கும் ..

அதன்பின் என் நண்பன் சபா.ரவி அவனுக்கு ஜோசியம் பாக்கனும்னு என்னையும் கூட்டிக்கிட்டு போனான்.. எனக்கும் பாத்துருவோமே அப்படின்னு என்னோட புக்கையும் எடுத்துட்டு போனேன் ..அவரோ உனக்கு நேரம் பிரமாதமா இருக்கு ஆனாலும் ஒருமுறை குரு கோவிலுக்கு போயிட்டுவான்னார் .. இந்த ஜோசியக்காரர் நீ அக்கா மகளைத்தான் திருமணம் செய்வாய் என்று சொல்லி ,அது எங்க வீட்டுல பெரிய புயல உண்டு பண்ணுச்சு (எனக்கு நாலு அக்கா அதில ரெண்டு அக்காவுக்கு கட்டிகொடுக்கிற வயசுல பொண்ணுங்க ..கேக்கனுமா )...

என்னோட இன்னொரு கூட்டாளி கணேச அழைச்சுக்கிட்டு ஆலங்குடி கோவிலுக்கு போனோம் .. அங்கு முறைப்படி அர்ச்சனைக்கு வேண்டிய அனைத்தும் வாங்கிக்கொண்டு வரிசைகட்டினோம் ..எங்கள்முறை வரும்போது வாசலில் ஒரு டாட்டா சுமோ வந்து நின்னது ..உடனே அர்ச்சனை செய்த ஐயரில்ஒரு ஆள் அவர்களை நோக்கி ஓடினார்.,

அவர்களை அழைத்துவந்து தலையில் பரிவட்டம் கட்டி ..மாலை ஒன்றை கழுத்தில் போட்டுவிட்டு அரைமணிக்கும் மேலாக அவர்களுக்கு மட்டும் அர்ச்சனை நடந்தது ..கடைசியில் டாட்டா சுமொக்காரன் ஒரு பத்து ரூபாயை தட்டில் போட்டான் .. எனக்கு பத்திக்கொண்டு வந்தது ..உடனே என் அர்ச்சனை சாமான்களை நண்பனிடம் கொடுத்துவிட்டு எனக்கு தலைவலிக்கிறது என சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட்டேன்..

அர்ச்சனை முடிந்து வந்த நண்பன் என்னிடம் தந்த பொருட்களை வாசலில் இருந்த பிச்சைகாரனிடம் அப்படியே கொடுத்தேன் ..பதறிய என் நண்பன் என்னடா பண்றே வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போகவேண்டாமா என்றான் ...மௌனமாக மறுத்துவிட்டு ஊர் வந்தேன் ..

ஆலங்குடியிலேயே தெரிந்துவிட்டது கடவுள் கோவிலில் இல்லை என்று ..
சரி எங்கிருக்கிறார் என்று தேடியபோது நண்பன் அறிமுகப்படுத்தியது ''வாழ்க வளமுடன் '' என்ற வேதாத்திரியின் அறக்கட்டளையை ..
அங்கு படிப்படியாக தியானம் பழகினேன் ..அகத்தாய்வு மூன்றாம் நிலைவரை பயிற்சி எடுத்துக்கொண்டேன் ..

அங்கிருந்து என் கடவுள் மறுப்பு கொள்கை தீவிரமானது ..பெரியாரை படிக்க ஆரம்பித்தேன் ..நண்பன் வால்காவிலிருந்து கங்கைவரை என்ற புத்தகம் தந்தான்..என் வாழ்கையை புரட்டிபோட்டது அந்த புத்தகம் ..

அதன்பின் ஜி.கே , யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி , ஓஷோ புத்தகங்கள் இன்னொரு பாதையை காட்டியது ...

என் திருமணமே சந்தர்ப்பவசத்தால் நான் விரும்பியபடி நடந்தது ..
தாலி கட்டாமல் ,ராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டேன் ...

இன்றுவரை கடவுள் தேடல் தொடர்கிறது ...

சமீபத்தில் திருவண்ணாமலை சென்றோம்(பன்னீர்அண்ணன் ,ராஜா ,இளங்கோ ) மலை உச்சியில் தீபம் ஏற்றும் இடத்துக்கு ஏறினோம் ..அங்கு ஒரு சித்தரின் சீடன் எங்களுக்கு தேனிர் போட்டுதந்தார் ,சில மூலிகைகளும் தந்தார். .

நான் கடவுளை காண்பேனா ...?

"இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழிலும் வெளியாகிறது"
www.tamilkurinji.com

4 கருத்துகள்:

தமிழ். சரவணன் சொன்னது…

//சரி எங்கிருக்கிறார் என்று தேடியபோது நண்பன் அறிமுகப்படுத்தியது ''வாழ்க வளமுடன் '' என்ற வேதாத்திரியின் அறக்கட்டளையை ..
அங்கு படிப்படியாக தியானம் பழகினேன் ..அகத்தாய்வு மூன்றாம் நிலைவரை பயிற்சி எடுத்துக்கொண்டேன் //

இங்கு தான் நான் அண்ணனை அருமையாண மனிதரை கண்டுகொண்டென்...
என்னா ஒன்னு மனசல உள்ளத அப்படியே பேசிடுவாரு ஆனா அதான் பிரச்சனையே

தமிழ். சரவணன் சொன்னது…

//நான் கடவுளை காண்பேனா ...?//

அன்பே சிவம் - அட அப்போ நாம தான் கடவுள்

ராஜன் சொன்னது…

கடவுள் இல்லை ! விவரமாக விரைவில் உங்கள் பிநோடத்தில் - ராஜன்

பெயரில்லா சொன்னது…

Not you body and mind. They belong to you. Not you.. so who are you.. you are the owner of those 2.

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி