4 மே, 2009

''ராமசாமி அத்தியாயம் - 13"

காதலும் நட்பும்தான் ஒருவனின் வாழ்வில் முக்கிய பங்கு ஆற்றுகிறது, சில பேருக்கு காதல் வாய்க்காவிட்டாலும், நட்பு இல்லாமல் யாரும் இருக்கமுடியாது, என் வாழ்வில் காதல் ஏற்படுத்திய தாக்கம்போல், நட்பும் பெரிய தாக்கத்தை இன்றுவரை ஏற்படுத்திவருகிறது.

பிறந்த ஊரில் ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக படித்து தொடர்ந்து நண்பர்களாக இருப்பவர்கள் அநேகம் இருப்பார்கள், எனக்கு அந்த வகையில் சத்தி அத்தானும், ராஜா மாப்பிள்ளையும் இப்போதும் நட்பாக உள்ளார்கள். இதில் சத்தி அத்தான் எங்களைவிட மூத்தவர், ராஜா என் செட்டு, சத்தி அத்தானுக்கு பத்தொன்பதாவது வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதனால் அவரை அப்போதுமுதல் முறைவைத்து கூப்பிட ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை என்னுடைய எல்லாவிசயங்களையும் அவரிடம் பகிர்ந்துகொள்வேன். வாரம் ஒருமுறை தொலைபேசியில் பேசிக்கொள்வோம். அவர் என் வாழ்க்கையில் முக்கியமான நபர். நல்ல மனிதர் கையில் காசு இருந்தால் நன்றாக செலவு செய்வார், சின்ன வயதில் தாயை இழந்ததால் செல்லமாக வளர்க்கப்பட்டவர். இன்றுவரை எந்த கவலையும் இல்லாத மனிதர் என்று எல்லோரும் சொல்வார்கள், ஆனால் தனிப்பட்ட முறையில் எல்லோர் மீதும் பரிவும் அக்கறையும் உள்ள மனிதர்.

நண்பன் ராஜா எனக்கு எதிர்வீடு, மேலும் மாமா பையன் ஒன்றாகவே விளையாடுவோம், ஏன் வீட்டில் எனக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு, ஆனால் அவனுக்கு நிறைய சுதந்தரம் உண்டு. சின்ன வயதில் இருந்தே எங்களுக்குள் ஒரு மறைமுகமான போட்டி இருக்கும், படிப்பில் சராசரி மாணவன் நான், ஆனால் அவனோ நல்ல மார்க் எடுப்பான், அவர்கள் வீட்டில் எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும், காலையில் வயலுக்கு போய்விட்டுத்தான் பள்ளிக்கே வருவான், ஆனால் எனக்கு எந்த வேலையும் இருக்காது, எப்போதும் விளையாட்டுதான். இரண்டுபேருமே வீட்டிற்கு கடைசி பிள்ளைகள், அதனால் இரண்டுபேருக்கும் இருவர் வீட்டிலும் ஒரு தனித்துவம் இருக்கும்.

ஒன்பதாவதுவரை அவனும் நானும் வேறுவேறு வகுப்புகள், பத்தாம் வகுப்பில் ஒன்றாக படிக்க ஆரம்பித்தோம், ஆனால் எங்களுக்குள் நட்பு வட்டாரம் மாறியது, பனிரெண்டாம் வகுப்புவரை அப்படிதான், அதிலும் பனிரெண்டாம் வகுப்பில் அவன் டீச்சருக்கு செல்லபிள்ளை, அதனால் நாங்கள் சற்று விலகியே இருந்தோம், பனிரெண்டில் நான் பெயிலானதால், அவன் மேற்கொண்டு படிக்க சென்றுவிட்டான், அதற்க்கு அவன் பட்ட சிரமம் சொல்லிமாளாது, அப்போதும் ஏன் வீட்டில் வந்து எனக்காக சண்டைபோட்டான், எப்படியாவது படிக்க வைங்க என அப்பாவிடம் உரிமையாக பேசினான், ஆனால் நமக்கு ஏறல.

அப்புறம் என்னுடன் சிங்கபூருக்கு வந்தான், அங்குதான் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட எதிரியானோம். பிறகு அவன் அமெரிக்கா சென்றுவிட்டான். ஆனால் இடைப்பட்ட காலத்தில் சில முக்கியமான முடிவுகளை எனக்கு தெரிந்தே எடுத்திருக்கிறான்.

கடந்த ஒருவருடமாக சென்னையில்தான் இருக்கிறான், ஆளே மாறிபோய் முழுக்க சமூக சிந்தனையுடன் இருக்கும் அவனை நினைக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இப்போதுபோல் ஆரம்பம் முதலே இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருப்பான். சரியான திட்டமிடலும், கடின உழைப்பும் கொண்டவன்.

சென்னையில் சொந்தமாக பிசினஸ் ஸ்கூல் நடத்துகிறான், கூடியவிரைவில் நாங்கள் இணைந்து சில விசயங்களை செய்யலாம் என்றிருக்கிறோம். முடிந்தால் இவனோட ப்ளாக்குக்கு சென்று ஒருமுறை வாசியுங்கள்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

கருத்துகள் இல்லை: