29 மே, 2009

"ராமசாமி அத்தியாயம் -16"

தொடர்ந்து பதினாறு வாரங்கள் என் கதையை படித்த உங்களுக்கு நன்றி. இடையில் எனக்கு ஏற்ப்பட்ட வேலைப்பளு காரணமாக சரியான நேரத்துக்கு தமிழ்குறிஞ்சிக்கு கதையை வழங்க முடியவில்லை. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு பதிவேற்றிய தமிழ்குறிஞ்சி ஆசிரியருக்கு நன்றி.

என்னுடன் படித்த நண்பன் ராஜா பற்றி சொல்லியிருக்கிறேன், இது இன்னொரு ராஜா பற்றி இவன் என்னோடு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை படித்தவன், அதற்க்கு அப்புறம் சிங்கபூரில்தான் சந்தித்தோம், ஒரு இக்கட்டான தருணத்தில் அவன் ஊர் வர வேண்டிய நேரத்தில் எங்களுடைய சந்திப்பு நிகழ்ந்தது, அப்போது ஒரு முக்கியமான பொருளை என்னிடம் கொடுத்து சென்றான். அதன்பிறகு மீண்டும் சிங்கப்பூர் வந்தபோது அந்த பொருளை அவனிடம் ஒப்படைக்க முடியவில்லை.ஏனென்றால் என்னுடன் தங்கியிருந்த என் நண்பன் கணேசனும், என் அண்ணனும் சேர்ந்து அதனை திருடிச்சென்று விற்றுவிட்டனர்.

எனவே அதற்கான பணத்தை அவனிடம் கொடுத்தேன், அப்போது முதல் சற்று நெருக்கமானோம். ஒரு மூன்று மாதம் கழித்து ஒருநாள் இருவரும் பியர் குடித்துகொண்டிருந்தோம், அப்போது அவன் உன்னை நான் மூன்றுமாதமாக டெஸ்ட் செய்தேன், அதில் நீ மிகவும் நம்பிக்கைக்கு உரியவன் என்று ஆனபின்தான் உன்னோடு நெருக்கமாக பழகுகிறேன் என்றான், நான் சத்தமாக சிரித்தேன், அவன் கோபமாக எதுக்கு சிரிக்கிறே என்றான், நான் கடைசிவரை உண்மையாக இருந்துவிடுவேன் ஆனால் உன்னால் இருக்கமுடியுமா என நினைத்தேன் சிரித்தேன் என்றேன், அவனோ ஏன் முடியாது நான் எப்பவும் உண்மையாக இருப்பேன் என்றான்.

அதன்பிறகு எங்களுக்குள் எந்த செலவுக்கும் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. பார்க்கிற அனைவரும் பொறாமைப்படுகிற அளவு எங்கள் நட்பு வளர்ந்தது. கிட்டத்தட்ட எங்கள் இருவரின் திருமணமும் ஒன்றாக நடத்தவேண்டும் என்ற அளவுக்கு நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் விதி வலியது அது எங்களின் வாழ்கையில் ஒரு பெண் வடிவில் புகுந்தது. நன்றாக வளர்ந்து சென்னையில் ஒரு தொழில் செய்ய ஆரம்பித்தோம், நான் சிங்கையிலும் அவன் சென்னையிலும் இருந்தோம், அப்போது அவனுக்கு ஒரு காதல் வந்தது.

எத்தனையோ பிரச்சனைகள் எங்களுக்கு வந்தபோதெல்லாம் அதனை ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுக்காமல் சமாளித்தோம். ஆனால் அவனுக்கு வந்த காதலால் ஏற்பட்ட பிரச்சினையால் நாங்கள் பிரிந்துபோனோம், அந்த பெண்ணும் மிகவும் நல்லவள்தான், தனக்கு உள்ள பிரச்சினையை சரியாக கையாள தெரியாமல் தானும் குழம்பி, எங்களையும் குழப்பி, அது எங்கள் இருவருக்கும் நிரந்தர பிரிவாக அமைந்துவிட்டது, கிட்டத்தட்ட பத்து வருட கால நட்பு இந்த காலகட்டங்களில் எங்களை அறிந்தவர்கள் நாங்கள் பிரிந்திவிடுவோம் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள், அப்படி ஒரு நட்பு அது. என் வாழ்க்கையில் நான் நேசித்தவர்களில் ராஜாவும் ஒருவன்.

நான் ஊருக்கு சென்றால் அவன் வீட்டில்தான் தங்குவேன், அங்குதான் சாப்பிட்டு தூங்குவேன், என் வீட்டிற்கும், அவன் வீட்டிற்கும் இரண்டு கிலோமீட்டர் இடைவெளிதான் இருந்தும் நான் அவன் வீட்டில்தான் தங்குவேன், அவனுடைய தாத்தாவும், பாட்டியும் என் மேல் வைத்திருந்த பாசம் அளவிடமுடியாத ஒன்று.

பிரச்சினை எங்கள் இருவரின் திருமணத்தை ஒன்றாக வைப்பதில் ஆரம்பித்தது. படிப்பை முடித்துவிட்டு காமாட்சி(என் மனைவி) ஒரு வருடமாக திருமணத்திற்காக காத்திருந்தாள், ஆனால் காயத்ரியோ(ராஜாவின் மனைவி) உன் திருமணத்தை தனியாக நடத்திகொள் என்கிறாள், ராஜாவோ இருபக்கமும் பேச முடியாமல் மென்று விழுங்குகிறான், ஒரு சமயம் நட்புக்கும், இன்னொரு சமயம் காதலுக்கும் சார்பாக இருந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான். அப்போது அவனைப்பார்க்க பாவமாக இருக்கும். ஆனாலும் நான் விட்டுகொடுக்கவில்லை.

இடையில் ஒருநாள் பிரச்சினை பெரிதாகி அவளை அவன் திட்டி அனுப்பிவிட்டான், அதற்குமேல் நானும் பிடிவாதம் பிடிக்கவில்லை, நான் தனியாக திருமணம் செய்துகொள்கிறேன் என சொல்லிவிட்டேன், அதற்கான ஏற்பாடுகளை அவனே செய்ய ஆரம்பித்தான். உடனே என் அக்கா வீட்டுக்காரர் முறைபடி வந்து பெண் கேட்க வேண்டும் என முரண்டுபிடிக்க அதற்காக ஊரில் இருந்து எல்லாரும் வந்து பேசிவிட்டு செல்ல, அக்கா வீட்டுக்காரர் தனக்கு பணம் தேவைபடுவதால் மூன்று மாதம் தள்ளி வைக்க சொன்னார், நான் எல்லா செலவையும் நானே பாத்துக்கிறேன் என்று சொல்லி விரைவான தேதியை பார்க்க சொன்னேன்.

எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருந்தது, அப்போது ருசி ஊறுகாயின் டீலராக கிண்டி முதல் தாம்பரம் வரை செயல்பட்டுக்கொண்டிருந்தோம், தொழிலில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் கம்பனி புதிதாக அறிமுகப்படுத்திய சில பொருள்களை அதிகமாக எடுத்து அனைத்து கடைகளுக்கும் வைத்துவிட்டோம், அது சரியாக போகவில்லை அதனால் கம்பெனிக்கும் எங்களுக்கும் சிறு பிரச்சினை வந்தது. எங்களை கேட்காமல் பாதி ஏரியாவை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டனர், அதனால் கம்பெனி மேல் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் செய்யபோனோம், போகும்போது அந்த கம்பெனி விற்பனையாளர் ரவியையும் அழைத்துசென்றோம், அங்கு போனதும் இன்ஸ்பெக்டர் இல்லை, கூட வந்த தினத்தந்தி நிருபர் இமாம் கசாலி தனக்கு சிறிது வேலை இருப்பதால் நீங்கள் இருந்து பார்த்துவிட்டு வாருங்கள் என சென்றுவிட்டார். எங்களுக்கும் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவே நாங்களும் வந்துவிட்டோம். ஆனால் ரெப் ரவி அவன் முதலாளிக்கு போன் செய்து நிலவரம் சொல்லியிருக்கிறான், அப்போது ருசி ஊறுகாய் சவேரா ஓட்டல் நிர்வாகத்திடம் இருந்தது, அதனால் அவர்கள் ஐ,ஜி ஆபிஸ் மூலமாக போன் செய்து இன்ஸ்பெக்டரிடம் எங்கள் மேல் வழக்கு பதிவு செய்யும்படி வற்புறுத்தியிருக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் கசாலிக்கு போன் செய்து எங்களை அழைத்து வராவிட்டால் அவரையும் சேர்த்து அரெஸ்ட் செய்வேன் என மிரட்ட, கசாலி எங்களுக்கு போன் செய்து என்ன செய்யலாம் எனக்கேட்டார். நான் நீங்கள் எங்களுடன் வாருங்கள் முதலில் எங்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லிவிடுகிறேன் போதமா என்றேன். கசாலி அது மட்டும் செய்தால் போதும் என்றார்.

நாங்கள் மூவரும் ஸ்டேஷன் போனதும் இன்ஸ்பெக்டர் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தார். என்னையும் ராஜாவையும் ஆட்கடத்தல் வழக்கில் உள்ளே வைத்துவிடுவேன் என மிரட்டினார், எங்களை பேசவிடவே இல்லை. அவரே ருசி முதலாளி மாதிரி உங்களால் ஒண்ணுமே புடுங்க முடியாது என ஏகத்துக்கும் சத்தம்போட ஆரம்பித்தார், கொஞ்ச நேரத்தில் தகாத வார்த்தைகளை பேச ஆரம்பிக்கவும் நான் கடுப்பாகி "டேய் நிறுத்துடா'' என்றேன். போலீஸ் ஸ்டேஷன் அப்படியே நிசப்தமானது. இன்ஸ்பெக்டர் உட்பட அத்தனைபேரும் ஒரு கணம் பேச்சற்று போயினர். ராஜா என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

பக்கத்து அறையில் இருந்த கிரைம் இன்ஸ்பெக்டர் டேய் இது போலீஸ் ஸ்டேஷன் தெரியுமா, உள்ள வச்சு பிச்சுடுவேன் என்றார். நானோ தைரியம் இருந்த கை வை பார்க்கலாம் என அவரிடமும் சத்தம் போட்டேன். என கோபத்தை என்னால் கட்டுபடுத்தவே முடியவில்லை. எல்லோரையும் ஒரு பிடி பிடித்தேன். முதன் முறையாக ராஜா என்னைப்பார்த்து பயந்தான். பொதுவாக நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என அவனுக்கு தெரியும், ஆனால் போலீசையே அப்படி பேசுவேன் என நினைக்கவில்லை.ஆனால் இந்த சம்பவத்தால்தான் எங்கள் பிரிவு தொடங்கியது.

கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது? ராஜாவும் நானும் எப்படி பிரிந்தோம் அது அடுத்தவாரம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

கருத்துகள் இல்லை: