21 செப்., 2010

வியாபாரம் - வெளிநாட்டு வேலையும், சென்னை தேநீர் கடையும்...

பொதுவாகவே படித்த, படிக்காத அனைவருக்குமே வெளிநாட்டு வேலைதான்  முதல் தேர்வாக இருக்கிறது.. அதற்கு காரணம் அங்கு கிடைக்க கூடிய அபரிதமான பணம் என்ற கற்பனையே.. உண்மையில் வெளிநாடுகளில் வியாபாரம் செய்தால் மட்டுமே அத்தகைய நிலையை நாம் அடைய முடியும், அல்லது முதல் தர நிலையில் இருக்கும் படிப்பாளிகளுக்கு அதற்கான வாய்ப்பு இருக்கும். அதிலும் தனி ஆளாக இருந்து சம்பாதித்து, மிச்சம் பிடித்து வீட்டுக்கு அனுப்பியதை உரியவர்கள் சரியான வகையில் முதலீடாகவோ, சேமிப்பாகவோ மாற்றியிருந்தால் மட்டுமே சாத்தியம். மற்றபடி குடும்பத்தினருடன் அங்கிருந்து சம்பாதிப்பது அந்த நாட்டு குடிமகனின் வாழ்க்கையை வாழ்வதைப் போலத்தான். இது பொதுவாகவே எல்லா நாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் பொருந்தும். 


சிங்கப்பூருக்கு படிக்காத ஒருவர் கட்டிட வேலைக்கோ, அல்லது சாதாரண தொழிற்சாலை ஊழியராகவோ செல்லவேண்டும் எனில் குறைந்த பட்ச தொகையாக ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும். இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் தொழில்நுட்பம் படித்தவர்கள் இரண்டு லட்சம் வரைக்கும் கொடுத்துதான் வேலைக்கு வருகிறார்கள். இது நிச்சயமாக அங்குள்ள முதலாளிகளுக்கும், இங்கிருக்கும் ஏஜெண்டுகளுக்குமானது. இவ்வளவு பெரிய தொகையை பெரும்பாலும் வட்டிக்கு வாங்கியே கொடுப்பதால் அவர்கள் இந்தக் கடனில் இருந்து மீளவே இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டும். அதன்பிறகுதான் சேமிப்பே. இதில் விதிவிலக்காக கணினியியல் வல்லுனர்கள் அதிகம்பேர் பணம் தராமல் வருகின்றனர்.

இதற்க்கு நிகரானதுதான் அமெரிக்காவுக்கோ, கனடாவுக்கோ, ஐரோப்பிய நாடுகளுக்கோ, வல்லுனர்கள் வேலைக்கு செல்வதும், இதற்க்கு உதாரணம் தேவையில்லை, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் வாசலில் காத்து கிடக்கும் நம்ம ஆட்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியும், அவர்கள் அனைவரும் உயர்ந்த படிப்புகளை படித்துவிட்டு இந்திய தேசத்துக்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருவதற்காய் பாடுபட வரிசை கட்டுபவர்கள். மற்றபடி மலேசியா மற்றும் அரபு தேசங்களுக்கு நாற்பதில் ஆரம்பித்து எண்பதினாயிரம் வரை செலுத்த வேண்டும். காரணம் அங்கு சொற்ப சம்பளமே கிடைக்கும்.

இதற்கும் சென்னை தேநீர் கடைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்...

நான் சென்ற வருட இறுதியில் ஒரு தேநீர் கடைக்காரரை எங்கள் நிறுவனத்துக்காக சந்திக்க வேண்டி வந்தது. வழக்கமாக எங்கள் நிறுவன சேவையை பெறவேண்டும் என்றால் ஒரு லட்சம் முன்பணமாக கொடுக்க வேண்டும். ஒரு சாதாரண தேனீர்க்கடை வைத்திருப்பவர் எங்கள் சேவையைப் பெற வருகிறார் என்றால் அது நிச்சயமாக சுவாரஸ்யமான ஒன்றாகத்தான் இருக்கும் என நினைத்து நானும் அவரை சந்திக்க ஆர்வமாக  இருந்தேன். 

அவரை சென்று பார்த்தேன். அவர் சென்னையின் பெரும்பாலான இடங்களில் கிட்டத்தட்ட முப்பது தேனீர்க் கடைகளுக்கு சொந்தக்காரர். அவர் ஒவ்வொரு கடையையும் அங்கிருக்கும் தேநீர் தயாரிக்கும் வல்லுனரிடம் பங்குதாரர் முறையில் கடையை கொடுத்து நடத்த சொல்லியிருக்கிறார். அதாவது ஒவ்வொரு நாளும் கிடைக்கும் வருவாயில் தேநீர் தயாரிப்பாளர் மற்றும் வேலை செய்பவர்கள் சம்பளத்தை எடுத்துக் கொள்வது மீதமிருக்கும் லாபத்தில் இவருக்கு எழுபது சதமும், தேநீர் தயாரிப்பாளருக்கு முப்பது சதமும் எடுத்துக் கொள்வது. வியாபார மொத்தமும் அன்றைக்கு இரவே கணக்கு பார்த்து மறுநாள் காலையில் இவர் வரும்போது கொடுத்துவிட வேண்டும்.

இதில் ஓவொரு கடையும் சராசரியாக அவருக்கு ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வருமானத்தை தந்து வருகிறது. எந்தக் கடையிலாவது வருமானம் வருவதில் குளறுபடி இருந்தால் இவரே பத்து நாளைக்கு கல்லாவில் அமர்வார், பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டு அதில் தேநீர் தயாரிப்பவர் முறைகேடு ஏதும் செய்திருந்தால் அன்றைக்கே அவரை வேலையை விட்டு அனுப்பி விடுவார். அதன்பிறகு வேறொரு ஆளுக்கு வாய்ப்பை வழங்குவார். அவர் எங்கள் நிறுவனத்தை அழைத்ததே அதையும் மீறி கடைக்கு தினசரி ஐநூறு ரூபாய் வரை திருடுகிறார்கள் அதனை கண்டுபித்து அல்லது திருட முடியாதவாறு ஒழுங்கு படுத்தி தரவேண்டும் என்பதற்குதான்.. 

அதனை நான் பதினைந்து நாட்களுக்குள் கண்டுபிடித்து அதனை சரி செய்து கொடுத்தேன்.. ஆனால் எனக்குள் இந்த முதலாளியின் அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து அவரை தனியாக சத்தித்து இதனைப் பற்றிக் கேட்டேன். மதுரை மாவட்டத்தில் ஓரளவுக்கு நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டு ஊரில் இருக்கும் குறைந்த அளவு விவசாய நிலத்தையும் கவனித்துக் கொண்டு, அங்கு ஒரு தேநீர் கடையும் வைத்திருந்திருக்கிறார், மகனின் வெளிநாட்டு ஆசையால் வட்டிக்கு பணம் வாங்கி அவனை அனுப்பி வைக்க, அவன் சம்பாதிப்பதைக் கொண்டு அடைக்க முடியாமல் போய் நிலத்தையே எழுதிக் கொடுக்கும் நிலைவந்து மீதம் கிடைத்த ஐம்பதினாயிரம் பணத்துடன் ஐந்து வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருக்கிறார், வந்த இடத்தில் ஒரு சிறிய தேநீர் கடையை விற்க போகிறார்கள் எனத் தெரிந்து இருந்த பணம் அதற்கு சரியாக இருக்க அதனை நடத்த ஆரம்பித்து இருக்கிறார். இவரின் நடவடிக்கையும், இவர் போடும் தேநீரும் வியாபாரத்தை பெருக்க கடை  அந்தப் பகுதியில் பெயர் சொல்லும் அளவுக்கு பிரபலம் ஆக, பக்கத்துக்கு தெருவில் தேநீர் கடை வைத்திருந்தவர் வியாபாரம் குறைந்து இவரிடம் வந்து தன் கடையை விற்கப் போகிறேன் யாராவது ஆள் இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார்.

இவரும் சொல்கிறேன் என அனுப்பிவிட்டார், ஆனால் இவரிடம் வேலை பார்த்தவர் இந்தக் கடையை நாமே வாங்கி நடத்தலாமே என ஆலோசனை சொல்லியிருக்கிறார். எப்படிப்பா ஒரு கடைக்கே நமக்கு முடியல, இன்னொரு கடையை நம்மால் நடத்த முடியுமா எனக் கேட்க, அவரோ முதலாளி நம்ம கடையவிட அது பெரிய கடை, வாடகையும், முன்பணமும்  நம்ம கடை அளவுக்குத்தான் அங்கும், மேலும் எல்லா சாமான்களும் ஒரு விலைபோட்டு எடுத்துக் கொள்ளலாம், நாம் இப்போது நடத்தும் கடையை நான் பார்த்துக் கொள்கிறேன் புதிய கடையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், ஊரில் என் மச்சான் நன்றாக தேநீர் தயாரிப்பான் அவனை வரவழைத்து அந்தக் கடையில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, இந்த யோசனை பிடித்துப் போய் இரண்டாவது கடையையும் எடுத்து நடத்த அது நன்றாக போகவே, முதல் கடையை பார்த்துக் கொள்பவருக்கு பங்குதாரர் அடிப்படையில் இன்று வரை அவருக்கு மட்டும் வருமானத்தில் அவரின் சம்பளம் போக ஐம்பது விழுக்காடு கொடுப்பதாகவும் சொன்னார்.

அதன்பிறகு இது பற்றி யோசித்து நகரின் வெவ்வேறு பகுதிகளில் கடையை ஆரம்பித்தோ, வாங்கியோ இன்று வரைக்கும் ( அவரை நான் சந்தித்த நாள்) முப்பது கடைகள் இருக்கின்றன என்றார். மேலும் அவரின் மகனை ஊருக்கு வரவழைத்துவிட்டதாகவும், ஊரில் பெரிய அளவுக்கு நிலம் வாங்கியிருப்பதாகவும் சொன்னார். இப்போது இன்னோவா காரில் வலம் வரும் அவர், ஒரு நிதி நிறுவனம் ஒன்றும் நடத்துகிறார். ஆக ஒரு கடையில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் வருமானம் வந்தால் ஒரு மாதத்துக்கு முப்பது கடைக்கு பதினெட்டு லட்சம் வருமானத்தை தருகிறது. ஒரு கடையை கைமாற்றினால் குறைந்தது மூன்று லட்சத்துக்கு போகும் முப்பது கடையும் தொண்ணூறு லட்சத்துக்கு போகும். ஐந்து வருடத்துக்கு முன் ஐம்பதினாயிரத்துடன் சென்னை வந்த அவரின் சொத்து இன்றைய தேதிக்கு கோடிகணக்கில்.

இப்போது சொல்லுங்கள் வெளிநாட்டில் வேலைக்குப் போய் உங்களால்   நீங்கள் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் இப்படி ஒரு நிலையை அடைய முடியுமா என்று. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வியாபாரம் ஆரம்பிப்பது மிக எளிது. ஆனால் நாம்  வெளிநாட்டில் கழிவறை சுத்தம் செய்கிறோம் கட்டிட வேலை பார்க்கிறோம், அல்லது மேல் மட்டமாக நேரம் காலம் பார்க்காது  உழைக்கிறோம். இங்கு இந்தியாவில் நம் வீட்டு வேலையை நாம் பார்ப்பதற்க்கே கவுரவம் பார்க்கிறோம். கொஞ்சம் மனதை விசாலமாக திறந்து நம் தேசத்தை பார்ப்போம். இங்குதான் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துமா என்பது சந்தேகமே.. ஏனெனில் மிகுந்த உத்வேகம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். எனக்கு வேலை பார்க்கத்தான் விருப்பம் என்று சொல்பவர்களுக்கு இது பொருந்தாது.

அடுத்த கட்டுரையில் வியாபாரத்துக்கு விற்பனை தந்திரம் முக்கியமா? பொருளின் தரம் முக்கியமா என்பதைப் பற்றி அலசுவோம்....

68 கருத்துகள்:

Ahamed irshad சொன்னது…

சில பேருக்கு சம்பாத்தியம் உள்ளுரிலேயே அமைவதற்கு உத்வேகம் இருக்கும்.பெரும்பாலனோருக்கு அப்படி இருந்தாலும் குடும்ப நிர்பந்தம்,ஏதாவது ஒரு வகையில குடைச்சல் இருக்கப்போய்தான் கடுப்போடு வெளிநாடு கிளம்புகிறார்கள்.. இப்படி சொல்லிக் கொண்டே போக நிறைய விஷயங்கள் இருக்கிறது.

நல்ல ஆக்கம் செந்தில் அவர்களே..

வினோ சொன்னது…

உண்மை தான் அண்ணே..
நம் நாட்டில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.. ஆனாலும் வேலை அமைவது வெளிநாட்டில் சில பேருக்கு..

Asiya Omar சொன்னது…

அருமையான பகிர்வு.

மார்கண்டேயன் சொன்னது…

இங்கு தான் என் வாழ்க்கை, இது தான் என்னுடைய இடம், எந்தத் துயரம் வந்தாலும் நான் இங்கேயே வாழ்ந்து காட்டுவேன் என்ற உறுதி இல்லாத மனிதனுக்கு தான் . . . இடம், பொருள் ஆகிய அனைத்தும் மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும்,

Prathap Kumar S. சொன்னது…

சூப்பர் பதிவு செநதில் ஜீ...

அந்த தேநீர்கடையில் நடந்த தில்லுமுல்லை எப்படி கண்டுபிடித்தீர்கள்.அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்களேன்...

சசிகுமார் சொன்னது…

எந்த தலைப்பை எடுத்தாலும் உங்களின் ஒவ்வொரு வரியும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டு கிறது நண்பா. அருமையான எழுத்து நடை வாழ்த்துக்கள் நண்பரே.

செல்வா சொன்னது…

//செல்லவேண்டும் எனில் குறைந்த பட்ச தொகையாக ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும். //

உண்மையாகவா அண்ணா .. நம்பவே முடியல ..?

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

தேநீர் கடைக்காரரின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. அதை நீங்கள் விவரித்த விதம் அருமை.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

Super....

இவரைப்போல் நிறைய பேர் இன்று சென்னையில் இருப்பார்கள்...

கிராமத்தில் ஒரு சொல் உண்டு தேநீர் கடை வைத்து பிழைக்காதவன் எந்த வியாபரத்துக்கும் இலாயிக்கில்லாதவன்....

செல்வா சொன்னது…

///அடுத்த கட்டுரையில் வியாபாரத்துக்கு விற்பனை தந்திரம் முக்கியமா? பொருளின் தரம் முக்கியமா என்பதைப் பற்றி அலசுவோம்....
///
எழுதுங்க .. காத்திருக்கிறோம் ..!!

Jey சொன்னது…

ஒரு சின்ன வியாபார நுணுக்கத்தையே தந்துவிட்டீர்கள்.
அருமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

உண்மைதான். உழைப்பவர்கள் எங்கிருந்தாலும் முன்னேறலாம்.

தனி காட்டு ராஜா சொன்னது…

//கொஞ்சம் மனதை விசாலமாக திறந்து நம் தேசத்தை பார்ப்போம். இங்குதான் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.//
உண்மை ...உண்மை ...உண்மை ...

என்னது நானு யாரா? சொன்னது…

//நம் வீட்டு வேலையை நாம் பார்ப்பதற்க்கே கவுரவம் பார்க்கிறோம். கொஞ்சம் மனதை விசாலமாக திறந்து நம் தேசத்தை பார்ப்போம். இங்குதான் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.//

என்ன போடு போடறீங்க தல! ரொம்ப நல்லா இருக்குங்க கட்டுரை! The best! Keep it up! அண்ணாச்சி!

Chitra சொன்னது…

ஏனெனில் மிகுந்த உத்வேகம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். எனக்கு வேலை பார்க்கத்தான் விருப்பம் என்று சொல்பவர்களுக்கு இது பொருந்தாது.


.....ரொம்ப நல்ல பதிவு..... இரண்டு பக்கங்களையும் அலசி விட்டீர்களே.....

அருண் பிரசாத் சொன்னது…

கே ஆர் பி அண்ணனுக்கு ஒரு டீ சொல்லுப்பா

சூப்பர் பதிவு அண்ணே!

பெயரில்லா சொன்னது…

தேனிர் கடை வியாபார யுக்தியே அனைத்து தொழிலுக்கும் அடிப்படை யுக்தி.நல்ல பதிவு

தமிழ் உதயம் சொன்னது…

உண்மையிலேயே இங்கு பிழைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. தேநீர் கடை என்றல்ல, ஒவ்வொரு தொழிலையும் மிகுந்த விருப்பத்துடன் செய்யும் பட்சத்தில் நாம் தோற்க வாய்ப்பே இல்லை. அருமையான பதிவு.

GSV சொன்னது…

நல்ல பகிர்வு !!!

GSV சொன்னது…

நல்ல பகிர்வு !!!

GSV சொன்னது…

நல்ல பகிர்வு !!!

Anisha Yunus சொன்னது…

ஒரு சிங்கிள் டீல இவ்ளோ விஷயமா?

சாதிக்கணும்னு நினச்சா எங்க இருந்தாலும் சாதிக்கலாம்ங்ணா! முடியாதுன்னு நினச்சா எங்கே போனாலும் முடியாதுதேன். சில வருடம் முன்னாடி நாணயம் விகடன்ல சக்தி மசாலாக்காரரோட கதையும் அதே மாதிரி ப்ரொஃபெஷனல் கூரியர்ஸ் கதையும் படிச்சிருந்தேன். இவங்க யாருக்கும் அவ்ளோ வித்தியாசமில்லை. தெரிஞ்சதை சிறப்பா செய்யணும்னு முடிவெடுத்து அதே போல செஞ்சிருக்காங்க. அதனாலதேன் இவ்ளோ தூரம் வளர்ந்திருக்காங்க!

அன்பரசன் சொன்னது…

ரொம்ப அருமையான அலசல் அண்ணா...

முரசொலி மாறன்.V சொன்னது…

சென்னையில் டீ கடை நடத்தும் தமிழரா? கடைசியில் அவர் ஒரு மலையாளி என்று முடிப்பீர்கள் என்று நினைத்தேன்.(99% மலையாளி கடையாமே)

ராஜவம்சம் சொன்னது…

சிறப்பானப பகிர்வு தல

வெக்கமாதா இருக்கு என்ன செய்ய இனிமே தான் முயற்ச்சி செய்யனும்.

Unknown சொன்னது…

அருமையான பதிவு இது மாதிரி நிறைய நிறைய எழுதுங்கள்.உற்சாகமாக உள்ளது.

vinthaimanithan சொன்னது…

கொஞ்சம் விரிவாக அலச வேண்டும்... மறுபடி வருகிறேன்.

ers சொன்னது…

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

vasu balaji சொன்னது…

very good one.

அம்பிகா சொன்னது…

வெளிநாட்டுவேலை என அதீத விருப்பம் கொண்ட அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகள். நல்ல பகிர்வு.

jothi சொன்னது…

வெளி நாடு செல்பவர்கள் அனைவருமே பணத்திற்குதான் செல்கிறார்கள் என முடிவு செய்யாதீர்கள்.15 வருடம் இரவு பகலாய் படிப்பதற்கு பதில்10 மாடுகளை மேய்த்தால் நல்ல வருமானம் வரும் என்பது எல்லாருக்கும் தெரியும். (நல்ல மாடு ஒரு நாளைக்கு 20 லிட்டர் கறக்கும்,..ஆக மொத்தம் ஒரு நாளைக்கு வருமானம் 20 x 10 x 15 = Rs 3000) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம். தன் துறையில் சிறந்த நிலைக்கு வரவேண்டும் என ஒவ்வொருவரும் நினைப்பதில் தவறில்லையே.

நீங்கள் ஏன் வெளி நாடு போகிறீர்கள்??? இங்கேயே எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக சென்னையில் ஆட்டோக்காரன் மாதம் முப்பாதயிரம் சம்பாதிக்கிறான். அண்ணா பல்கலைக்கழக விரிவுரையாளர் 25 ஆயிரம் சம்பாதிக்கிறார். அதுக்காக ஆட்டோக்காரன் தான் பெஸ்ட் நான் என் பெண்ணைக் கொடுப்பேனா சொல்லுங்கள்???.

அப்படிப் பார்த்தால் நம்ம ஊரில் எல்லாருமே டீக்கடை வைத்து, ஆட்டோ ஓட்டி சம்பாரிக்கலாமே,.. யாருமே படிக்க வேண்டியதில்லையே.

jothi சொன்னது…

வெளி நாட்டு கூலி வேலைக்கு செல்பவர்கள் நிலை மிக மோசம்,. அதை வர்ணிக்க முடியாது. ஆனால் ஒவ்வொருவரின் நிலையும் ஒவ்வொரு மாதிரி.அவர்களின் குடும்ப சூழ்னிலை அவர்களுக்குதான் தெரியும். அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர முடியாது.

jothi சொன்னது…

ஆனால் பதிவு அட்டகாசமான பதிவு,.. சிறப்பான நடை நண்பரே,..இது போலெ தெளிவாக எழுத உங்ககிட்ட கத்துக்கணும்

அலைகள் பாலா சொன்னது…

தன்னம்பிக்கை தரும் பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

சூப்பர் பதிவு

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ரொம்ப நாளுக்கப்பறம் உங்ககிட்ட இருந்து அட்டகாசமான பதிவு..

தாங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?

தருமி சொன்னது…

மிக நல்ல பதிவு. நன்றி

ஹேமா சொன்னது…

எல்லாம் சேர்த்து வாசித்துக் களைத்துப்போனேன் செந்தில்.உங்களைப்போல !

ப.கந்தசாமி சொன்னது…

கோயமுத்தூரிலும் இந்த மாதிரி டீக்கடை வியாபாரம் நடக்குதுங்க.

SEKAR70 சொன்னது…

படைப்பின் ரகசியம் தெரியாத பேமாரிதான் வெளிநாட்டுக்கு வேலை தேடிசெல்வான்.காஷ்மிரில் வாழும் பனிகரடியே பிடித்து கன்னியாகுமரி யில் கொண்டு விட்டால்...எப்படியிருக்கும் தோழமையே....கொஞ்சம் சிந்திக்கவைத்த பதிவு பாராட்டுவோம்...

SEKAR70 சொன்னது…

//அப்படிப் பார்த்தால் நம்ம ஊரில் எல்லாருமே டீக்கடை வைத்து, ஆட்டோ ஓட்டி சம்பாரிக்கலாமே,.. யாருமே படிக்க வேண்டியதில்லையே.//ஐயயே..ஜோதி...புரோக்கர் ஓரு நாளைக்கு லச்சம் சம்பாதிக்கிரான் இந்ததிருநாட்டில்...படிச்சவன் அங்கு போய் என்ன வேலை பாக்கிறான் பட்டியல்யிடுங்க பார்போம்...இந்தவேலையே தான் டாட் காம்மில் பண்ணுரான்.

....என்னவளம் இல்லை இந்ததிருநாட்டில் ஏன்கையே ஏந்தவேண்டும் வெளிநாட்டில்...

பெயரில்லா சொன்னது…

கலக்கலான மற்றொரு பதிவு அண்ணே!

Renga சொன்னது…

///அஹமது இர்ஷாத் சொன்னது…
சில பேருக்கு சம்பாத்தியம் உள்ளுரிலேயே அமைவதற்கு உத்வேகம் இருக்கும்.பெரும்பாலனோருக்கு அப்படி இருந்தாலும் குடும்ப நிர்பந்தம்,ஏதாவது ஒரு வகையில குடைச்சல் இருக்கப்போய்தான் கடுப்போடு வெளிநாடு கிளம்புகிறார்கள்.. இப்படி சொல்லிக் கொண்டே போக நிறைய விஷயங்கள் இருக்கிறது.

நல்ல ஆக்கம் செந்தில் அவர்களே..
21 செப்டெம்ப்ர், 2010 4:28 pm///

Many people going oversea because of family problem. They give up their ambitions becoz of family.

Mr Senthil

I have become your fan. Your writings are so wonderful. Especially oversea stories.

Keep it up

Renga

Sridhar சொன்னது…

This may not be applicable for the people who wants to explore possibilities in research and technology. Though now things are getting improved it is still not that interesting. Just look the politics played in ISRO and DRDO. You never feel like contributing to India.

This may be for the people who went for blue collar jobs in foreign countries. But I heard that the salaries for ITI certificate holders are much higher in Australia!

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

நல்ல பகிர்வு..!

நாடோடி சொன்னது…

என்ன‌ தொழில் செய்தாலும் அதை முழுமையான‌ ஈடுபாட்டுட‌ன் செய்தால் வெற்றி தான். ந‌ல்ல‌ ப‌கிர்வு செந்தில் அண்ணே.

rajasundararajan சொன்னது…

பணம் சேர்கையில், நன்கொடை அது இது என்று பேட்டை ரவுடிகள், வட்ட மாவட்டங்கள், காவல்/ நகராட்சித் துறையினர் பிடுங்க வருவதை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

இவ்வளவு பணத்தை வங்கியில் இட்டு வைக்க முடியாதே! அதை எப்படிப் பாதுகாக்கிறார்கள்/ புழங்குகிறார்கள்?

என் அறிவுமட்டத்துக்கு வியப்பளிக்கிற வினாக்கள் இவை. பொருட்படுத்தக் கூடியவை என்றால் விளக்கும்படி வேண்டுகிறேன்.

ராஜன் சொன்னது…

படிப்பு என்பது அறிவு வளர்சிக்கு மட்டுமே , அதிக பணம் சம்பாதிக்க ( நேர்மையாக ) தொழில் செய்தால் தான் முடியும் என சொல்லும் பதிவு ! பணம் சம்பாதிக்க கல்வி அவசியம் இல்லை ! , ஆனால் அறிவு வளர்சிக்கு நிச்சியம் தேவை.

Kousalya Raj சொன்னது…

பலருக்கும் தன்னம்பிக்கை தரும் ஒரு நல்ல பகிர்வு...படிப்பவர்கள் இதன் மூலம் அவர்களுக்கு தேவையான கருத்துகளை எடுத்து கொள்வதுதான் சரி. இங்கேயே தொழில் செய்வது என்றாலும் வெளிநாடு செல்வது என்றாலும் எதுவும் அவர்களின் சூழலை பொறுத்தது. எதை செய்தாலும் உழைப்பும், தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இல்லாவிட்டால் அனைத்தும் வீண்தான். சொந்த தொழிலுக்கு இவை மூன்றும் மிகவும் அவசியம். ரிஸ்க் அதிகம் , இது வேண்டாம் என்று எண்ணுபவர்கள் வேலையை தேர்ந்து எடுக்கிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் ......

எல் கே சொன்னது…

good post

Jackiesekar சொன்னது…

இந்த கதை பற்றி நிறைய பேசி இருக்கின்றோம்... ஒவ்வொரு முறையும்.. அந்த கடைகாரர் மீது ஆச்சர்யம் கொள்வேன்...

ரோஸ்விக் சொன்னது…

அன்றைக்கு நீங்கள் சொன்னப்பவே எனக்கு தலை சுத்திடுச்சு சாமி...

நிறையக் கத்துக்க வேண்டும் உங்ககிட்ட இருந்தும்...

"உழவன்" "Uzhavan" சொன்னது…

சூப்பர்..

Paleo God சொன்னது…

அருமையான பகிர்வு. பெங்களூரில் அயர்ன் செய்து மூன்று வீடு வாங்கி பெண்களை நல்லபடியாக படிக்க வைத்து இன்னும் அயராமல் தொழில் செய்யும் தமிழரை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். :)

ராஜ நடராஜன் சொன்னது…

Simple doctrine in life is to explore the opportunities!

Global villageக்கு முன்னாடியே திரை கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்லி வெச்சுட்டுப் போய்ட்டாங்களே!அப்ப அது:)

இந்தியாவின் பண கையிருப்புக்கு வெளிநாட்டு காசும் ஒரு காரணமாக்கும்.

ஒரு லட்சமெல்லாம் ஏஜண்டுக்கு கட்டணுமின்னா நான் ஏன் விமானம் ஏறப் போறேன்:)

அரசியல் பதிவெல்லாம் போடுறீங்களே!டீ கடை வெச்சா தாதா,கடைய அடைக்காம தொழிலெல்லாம் செய்ய முடியுமா?

என்னமோ போங்க!கடை பெஞ்சுல உட்கார்ந்து பேப்பர் படிச்சிகிட்டு டீ குடிக்கிறது,இப்ப உங்க பிளாக் படிக்கிற சுகம் காசேதான் கடவுளடாவில் இல்லீங்ண்ணா!

சுந்தரா சொன்னது…

சொந்தமாகத் தொழில்செய்து முன்னேற நினைப்பவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய பதிவு.

பகிர்வுக்கு நன்றிங்க.

சீனிவாசன் சொன்னது…

கலக்குங்க தல.

மங்குனி அமைச்சர் சொன்னது…

இவரு பன்னாரே அதுதான் சார் டெக்னிக் , இதே போல் நிறைய பேர் உழைக்கிறார்கள் , சில பேருடைய டெக்னிக் வெற்றி அடைகிறது (சரவணா பவன் , ரிலைன்ஸ் , srm கல்லூரிகள் ...... ext ......)

vanathy சொன்னது…

தாமதித்து இன்றுதான் படித்தேன் நல்ல பதிவு,பாராட்டுக்கள்
வெளிநாடுகளில் முதல் தர வேலை பார்த்தாலும் cost of living கூடுதலாக உள்ளதால் வரவும் செலவும் சரி . இது இந்திய இலங்கை நாடுகளில் உள்ள உறவினருக்குப் புரிவதில்லை.
அடிப்படை தேவை தவிர நுகர்வு பொருள்கள் அதுவும் நவீன latest consumer goods பொருள்கள் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.இதனால் பனியிலும் குளிரிலும் தூக்கம் இன்றி இரண்டு வேலைகள் பார்த்து அங்கு சும்மா இருக்கும் உறவினருக்கு பணம் அனுப்பும் பல இளைஞர்கள் பார்த்து வருத்தப்பட்டுள்ளேன்.உணவுக்கும் உடைக்கும் கல்விக்கும் மருத்துவ செலவுக்கும் பணம் அனுப்பலாம் ஆனால் latest luxury items kku அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது ,அவர்களை குறிக்கோள் இல்லாத சோம்பேறிகளாக மாற்றும் என்பது எனது சொந்தக் கருத்து.
பெரும்பாலும் பணத்துக்காக வெளிநாடு போனாலும் மேல்படிப்பு,திருமணம் தாய்நாட்டின் அரசியல் சூழ்நிலை காரணமாகவும் வெளிநாடு போகிறார்கள்.
இப்போது ஆசிய நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி high growth rate நிலையில் உள்ளதால் அங்கே வாய்ப்புகள் அதிகம்.

விஜய் போன்ற நடிகர்கள் ஒரு படத்துக்கு நாலு கோடிகள் வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்,இது பிரிட்டிஷ் பிரதமரின் ஒரு ஆண்டு சம்பளத்தை விட கூடுதலானது.முன்பு பிரிட்டிஷ் பிரதமரின் சம்பளம் ஒரு லட்சத்து தொன்னோராயிரம்,£190,000பின்பு நாடு நிதி நிலை கருதி அதை ஒரு லட்சத்து நாற்பதாயிரமாக £140.00தானே குறைத்துக் கொண்டார். அது இந்திய கணக்குப் படி ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு லட்சம் ரூபாய்கள்.இது தமன்னா ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை விட குறைவு.
ஒரு பணக்கார வளர்ச்சியடைந்த நாட்டின் பிரதமரின் ஒரு ஆண்டு சம்பளம் ,முன்னூறு மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் ஒரு நாட்டின் இருபது வயது சினிமா நடிகையின் ஒரு பட சம்பளத்தை விட குறைவு என்பது ஆச்சரியம்
இந்தியா ஏழை நாடு அல்ல ,ஏழைகள் நிறைந்த நாடு , இந்தியாவின் பணம் எல்லாம் சுவிஸ் வங்கியிலும் சில இந்தியக் குடும்பங்களின் கைகளிலும் முடங்கிக் கிடக்கிறது.
--வானதி

jothi சொன்னது…

மிக அழகாக சொல்லி இருக்கீர்கள் வானதி. சல்யூட்.

பெயரில்லா சொன்னது…

i have read it long back. but remembered even now and voted in tamilmanam.

ஆமினா சொன்னது…

தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

உமர் | Umar சொன்னது…

தமிழ்மணம் விருது வென்றதற்கு வாழ்த்துகள் தலைவரே!

ராஜவம்சம் சொன்னது…

வாழ்த்துக்கள் தல தமிழ்மண விருதுக்கு.

Bharathi சொன்னது…

தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்! தேநீர் கடையில் என்ன குளறுபடி நடந்தது? அதை எப்படி கண்டு பிடித்தீர்கள்? அதற்கு என்ன தீர்வு கொடுத்தீர்கள்?

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் சொன்னது…

Good article.

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் சொன்னது…

good article

Raj Muthu Kumar சொன்னது…

Super Thala. I read this more than 10 times.