25 நவ., 2011

புகைப்படத்தில் சிரிப்பவள்...


அடர்த்தியாய் பூமியை நனைக்கும் 
மழை மேகமென இருப்பாள் அவள்,
அவ்வளவு கருப்பு 
அவ்வளவு அழகு 
அழகு கருப்பு என்பார்கள் 
அவளை என் ஊரார்கள்..

நான் சிவந்த மாநிறம் 
அதனால் சற்று கூடுதலான பெருமைகளை உடையவன் 
ஆனாலும் 
அவளை எனக்குப் பிடிக்கும் 
"வெறுமனே பிடிக்கும் என்று சொல்வதைவிட 
காதலிக்கிறேன் என்று சொல்லேன்" என்பான் செல்வம்
"அவளைப் போயாடா? " என்றாலும் 
அவள்தான் எனக்கென முடிவு செய்தவன் நான்..

ஒன்றிரண்டு வாத்தியார்கள் கூட 
அவளை காதலிக்க முயற்சிப்பதாக குமார் சொன்னான்.
அதில் எனக்கு பெருமிதமே 
ஏனெனில் அவளும் என்னை காதலித்தாள்!
கடிதங்கள் 
முத்தங்களாய் மாறும் அளவு
முன்னேறியது எங்கள் காதல்..

பள்ளி வளாகம் தாண்டி 
ஊருக்குள்ளும் எங்கள் காதல் நெருப்பு பற்றிக்கொள்ள 
குலப்பகையை காரணம் காட்டி 
அவசரமாய் 
அவளது குடிகாரத் தாய்மாமனுக்கு கட்டிவைத்தனர்..

இப்போதும் 
எப்போதாவது 
நினைவுகளில் என்னை மீட்டெடுக்கும்போது
எங்கள் பள்ளி புகைப்படத்தில் இருக்கும் 
அவள்தான் ஆறுதலாய் உடனிருப்பாள்
அந்தக் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் 
எனக்குப் பக்கத்தில் 
அவள் மனதைப்போலவே 
வெள்ளையாய் சிரிப்பாள்
தன் திருமணத்துப் பிறகு 
எப்போதும் சிரிக்க மறந்து போன அவள்.. 

2 கருத்துகள்:

vasan சொன்னது…

காத‌ல் என்ற‌ல் உயிர் தான்....ஆனால்,
உயிர் போல் காத‌ல், ஒரு முறை ம‌ட்டும் வாழ்ந்து சாவதில்லை,
அது சாவில் வாழ்கிற‌து சிர‌ஞ்சீவியாய்.... ப‌ல‌ரோடான‌ போதினும்.

Unknown சொன்னது…

நிறைவேறாத காதல்கள்
கண்ணாடியில் எத்தனை முறை
துடைத்தாலும் போகாத கறை போல
மனதில் எப்பொழுதும் இருக்கிறது
அனைவருக்கும்....