1 டிச., 2011

சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீடு - அவசியமே!...


சமீபத்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவில் சில்லறை வர்த்தகத்தில் ஒரே ஒரு பொருளின் விற்பனை அனுமதி 100% ஆகவும். அதாவது லீவைஸ் போன்ற பிராண்டுகள் ஒரே பெயரில் இருக்கும் ஆனால் அதில் நிறைய தனித்தனி பிராண்டுகள் இருக்கும் ஆனால் மொத்தமாக லீவைஸ், ஜியோர்டனோ போன்றவை இந்தவகையில் அடங்கும். மற்றபடி பல்வேறு பொருட்களை விற்பதற்கு 51% அனுமதியும் அளித்திருக்கிறது. முழுக்க கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும், ரஷ்யாவிலும் இதை அனுமதித்து மாமாங்கமாயிற்று. அதிலும் அந்த நாடுகளில் 100% அனுமதி 1992 லியே தந்துவிட்டார்கள். இப்போதுதான் இது இந்தியாவில் எட்டிப்பார்த்தாலும் வால்மார்ட் ஏற்கனவே பாரதியுடன் உள்ளே நுழைந்துவிட்டது.

இப்போது இதனை அனுமதிக்ககூடாது எனப்போராட்டம் செய்கிறார்கள். தமிழக அரசும் தமிழ்நாட்டில் இதனை அனுமதிக்கமுடியாது என்று சொல்லிவிட்ட நிலையில் இதனால் என்ன பாதிப்புகள் வரும் என்று பார்க்கலாம்.

முதலில் சில்லறை வணிகர்கள் அதாவது நம் தெருவில் பலசரக்குக்கடை வைத்திருப்பவர்கள் பாதிப்பார்கள் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு ஓரளவு விற்பனையில் சரிவு இருக்கவே செய்யும். ஆனால் முழுதாக பாதிக்காது. அடுத்து இதனால் 4 கோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். இல்லை அத்தனை தொகை மக்களின் வாழ்வாதாரம் மேம்படவே செய்யும். வேலை வாய்ப்புகள் பெருகி சம்பள விகிதம் அதிகரிக்கும். உதாரனத்திற்கு சென்னை தி.நகரில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் பையனோ, பெண்ணோ கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு தங்கும் இடம், உணவு கொடுத்து பணிரெண்டு மணிநேரத்துக்கு மேல் வேலை வாங்கிவிட்டு கொடுக்கும் அதிகபட்ச ஊதியம் ஐந்தாயிரத்துக்கு குறைவாக இருக்கும். ஆனால் பெரிய நிறுவனங்கள் வந்தால் குறைந்த பட்ச சம்பளம் அரசாங்கம் நிர்ணயித்த அளவிற்கு கொடுப்பார்கள். மேலும் மாட்டு கொட்டடி போன்ற தங்குமிடம் தவிர்த்து ஆரோக்கியமான தங்குமிடம் தருவார்கள்.

தி,நகரில் நம் ஆட்கள் வைத்திருக்கும் அத்தனை கடைகளிலுமே எந்த தளத்திலும் முறையான கழிவறைகள் இல்லை. நாம் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் எனில் அந்தக் கட்டிடத்தின் மொட்டைமாடியில் இருக்கும் ஒரு அடாசு கழிவறைக்கு செல்லவேண்டும். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமயை நினைத்துப்பாருங்கள். மேலும் அங்கிருக்கும் பெரும்பாலான ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களை மதிக்கவே தெரியாது. இவர்கள் வாடிக்கையாளரை அதிலும் பெண்களை அவமானப்படுத்திய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. மேலும் சட்ட விதிகள் எதையும் பின்பற்றாத விதிமுறை மீறிய கட்டிடங்கள். வரி ஏய்ப்பு என   ஏகப்பட்ட குளறுபடிகளை செய்கிறார்கள். அதிலும் அங்கிருக்கும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதரங்கள் அனைத்திலும் கைவைத்து அத்தனை வகை பொருட்களையும் குவித்து இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.

முதலில் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் இறங்கியபோது எல்லாமே போச்சு என்று அழுதவர்கள் இப்போதும் கண்ணீர் வடிக்கிறார்கள். சில்லறை வர்த்தக அனுமதியால் ஒவ்வொரு பொருளுக்கும் முறையான விற்பனை வரி வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு செல்லும். விவசாயிகளுக்கும், சிறு தொழில் செய்வோரும் வளர்ச்சி அடைவார்கள். மக்கள் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்க முடியும். நிறைய நிறுவனங்கள் தொழிலில் இறங்கி போட்டிபோட்டுக்கொண்டு தரமான பொருட்களை விலை மலிவாக தருவார்கள். பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல மரியாதையான சம்பளத்தில் வேலை கிடைக்கும். 

சிங்கப்பூரை பொறுத்தவரை அங்கு அரசாங்கத்தில் சில்லறை வர்த்தக நிறுவனமான NTUC சூப்பர் மார்கெட் இருக்கிறது, கோல்ட் ஸ்டோரேஜ் இருக்கிறது, முஸ்தபா உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனத்தின் பெரிய ஹைப்பர் மார்ட்டுகள் இருக்கின்றன. ஆனாலும் தேக்கா எனப்படும் குட்டி இந்தியாவில் வரிசையாக நம் தமிழர்களின் கடைகள் இருக்கும். இதுபோக ஒவ்வொரு அடுக்காக தரைத்தளத்திலும் நம் இந்தியர்களால் பெரும்பாலும் நடத்தப்படும் சிறிய அளவிலான மளிகை கடைகள் இருக்கும். ஓவ்வொரு பேட்டையிலும் ஈரச்சந்தை எனப்படும் காய்கறி மற்றும் கோழி, மீன், இறைச்சி கடைகள் இருக்கும் இத்தனை வியாபாரிகளுக்கும் அங்கு பலன் இருக்கத்தான் செய்கிறது. 

நாம் ஒவ்வொன்றாக எதிர்த்தோம், ஆனால் அவை அனைத்தும் வரத்தான் செய்தது. செல்போன் வந்தபோது கடுமையாய் எதிர்த்தோம் ஆனால் இன்று அதன் பலனை எதிர்தவ்ர்கள்தாம் அதிகம் அனுபவிக்கிறார்கள். சின்னத்திரை வந்தபோது பெரியதிரைக்காரர்கள் எதிர்த்தார்கள். கமல்ஹாசன் தவிர எதிர்த்த பெரும்பாலோருக்கு சோறு போடுவதே சின்னத்திரைதான்.

ஆனால் இதிலிருக்கும் ஒரேயொரு பயம் நம் அரசியல்வாதிகள் பணம் வாங்கிக்கொண்டு வரிச்சலுகை, மின்சார கட்டணம் போன்றவற்றை அவர்களுக்கு தந்தால் அது நம் நாட்டின் பணம் வெளிநாடுகளுக்குத்தான் போகும். மேலும் நம் நாட்டு தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வெளிநாட்டு நிறுவனங்களைப் போல் வங்கிகளை சரியாகப் பயன்படுத்தினால். ஏகப்பட்ட முதலீட்டை நாம் வங்கிகளில் இருந்து பெறலாம். ஆனால் எப்படி அரசாங்கத்தையும், மக்களையும், வங்கிகளையும் ஏமாற்றலாம் அந்த பணத்தை எப்படி பதுக்கலாம் என்ற குறிக்கோளுடன்தான் பெரும்பாலான இந்திய இடைநிலை நிறுவனங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு இப்படிப்பட்ட இடைநிலை நிறுவனங்கள் யாவும் M.B.A மற்றும் கணக்கியல் துறை வல்லுனர்களை வேலைக்கு அமர்த்தவே அமர்த்தாது. அப்படியே அமர்த்தினாலும் சம்பந்தப்பட்ட துறை பற்றிய முழமையான அறிவு கொண்டவர்களை வேலைக்கு வைக்க மாட்டார்கள். இவர்கள் விரும்புவதெல்லாம் எப்படி வேண்டுமானாலும் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தால் போதும். கடைசியில் நல்ல (அதாவது மோசமான) ஆடிட்டராக பார்த்தது பெரிய தொகை கொடுத்து கணக்கினை சரி செய்வார்கள். வருமான வரி அதிகாரிகளை சரிகட்டி காரியம் சாதிப்பார்கள்.

இன்றைய தேதிக்கு முறையான நிர்வாகம் செய்து அதற்க்கான வரிகளை முறையாக அரசாங்கத்துக்கு கட்டும் நிறுவனங்கள் மிக சொற்பமே. இந்த இடத்தில்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் சரியாக இயங்குகின்றன. அவற்றின் திட்டங்களும், போகவேண்டிய பாதைகளும் மிக தெளிவாக திட்டமிடப்பட்டு வங்கிகளை சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள். எனவே நான் நம்மை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். இல்லையெனில் நல்லதை வரவேற்கவாவது செய்யவேண்டும்.

இன்றைக்கு நாம் மறுக்கலாம்,போராடலாம் ஆனால் அடுத்த ஐந்தாண்டிற்க்குள் 100% வெளிநாட்டு முதலீட்டை நாம் அனுமதித்தே ஆகவேண்டும். இல்லையெனில் நம் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் அதல பாதாளத்திற்குப் போகும்.

இந்தக் கட்டுரையை சரியான காரணங்களுடன் மறுக்கும் விவாதங்களை வரவேற்கிறேன்... 

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உண்மை.

ரிஷி சொன்னது…

செந்தில்,
தலைப்பை நிரூபிக்கும் அளவுக்கு கட்டுரையில் ஆழமில்லை. மேலோட்டச் செய்திகளில் விஷயமுமில்லை. எனவே, விவாதிக்க ஒன்றுமில்லை எனக் கருதுகிறேன்.

Ravichandran Somu சொன்னது…

Good post. In my opinion, Farmers will benefit.

Sankar Gurusamy சொன்னது…

//முதலில் சில்லறை வணிகர்கள் அதாவது நம் தெருவில் பலசரக்குக்கடை வைத்திருப்பவர்கள் பாதிப்பார்கள் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு ஓரளவு விற்பனையில் சரிவு இருக்கவே செய்யும். ஆனால் முழுதாக பாதிக்காது. //

மொத்த வியாபாரத்திற்கான விலையில் நேரடியாக பொருட்களை பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கி விற்க முற்படும்போது இந்த போட்டியாளர்களை நசுக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். விலைகளை குறைப்பதிலிருந்து வீட்டுக்கு டெலிவரி கொடுப்பதுவரை. இதை இவர்கள் பல நாடுகளில் செய்திருக்கிறார்கள்.

//வேலை வாய்ப்புகள் பெருகி சம்பள விகிதம் அதிகரிக்கும்.//

இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. முக்கியமாக சம்பளவிகிதம் பற்றி எந்த உத்தரவாதமும் யாராலும் இன்று தரமுடியாது.

//ஆனால் பெரிய நிறுவனங்கள் வந்தால் குறைந்த பட்ச சம்பளம் அரசாங்கம் நிர்ணயித்த அளவிற்கு கொடுப்பார்கள். மேலும் மாட்டு கொட்டடி போன்ற தங்குமிடம் தவிர்த்து ஆரோக்கியமான தங்குமிடம் தருவார்கள்.//

இந்த பெரிய நிறுவனங்கள் ஆரம்பிக்கும் போது வேண்டுமானால் இப்படி இருக்கலாம். ஆனால் நாளாக நாளாக இவர்களும் இந்த சட்டங்களை வளைப்பதற்கு கற்றுக்கொள்வார்கள். மீண்டும் மாட்டுக் கொட்டடிகளுக்கு ஊழியர்களை மாற்றிவிட்டு, நல்ல இடங்களை வாடகைக்கு விட்டு விடுவார்கள் அல்லது அங்கும் கடை விரித்துவிடுவார்கள்.

//தி,நகரில் நம் ஆட்கள் வைத்திருக்கும் அத்தனை கடைகளிலுமே எந்த தளத்திலும் முறையான கழிவறைகள் இல்லை. நாம் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் எனில் அந்தக் கட்டிடத்தின் மொட்டைமாடியில் இருக்கும் ஒரு அடாசு கழிவறைக்கு செல்லவேண்டும். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமயை நினைத்துப்பாருங்கள். //

இவர்கள் புதிதாக கடைகள் திறக்கும்போது இருக்கும் சுத்தமும் எண்ணிக்கையும் நிரந்தரமாக இருக்க வாய்ப்பு மிகவும் கம்மி.

//மேலும் அங்கிருக்கும் பெரும்பாலான ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களை மதிக்கவே தெரியாது. இவர்கள் வாடிக்கையாளரை அதிலும் பெண்களை அவமானப்படுத்திய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. //

துரதிர்ஷ்டவசமாக பன்னாட்டு நிறுவங்களிலும் முதலில் இவர்களைத்தான் வேலைக்கு வைப்பார்கள். ஏனெனில் இவர்களுக்குதான் இந்த துறையில் அனுபவம் இருக்கிறது. எனவே இது முற்றிலும் மாற வாய்ப்பு இல்லை.

//ஆனால் இதிலிருக்கும் ஒரேயொரு பயம் நம் அரசியல்வாதிகள் பணம் வாங்கிக்கொண்டு வரிச்சலுகை, மின்சார கட்டணம் போன்றவற்றை அவர்களுக்கு தந்தால் அது நம் நாட்டின் பணம் வெளிநாடுகளுக்குத்தான் போகும். //

இது நிச்சயம் நடக்கத்தான் போகிறது. மேலும் வட்டி சலுகை, இலவச அல்லது சலுகை விலையில் நிலம் என நம் கோவணத்தை அவிழ்த்துதான் இவர்கள் கடைகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யப்போகிறார்கள்.

இது தவிர, அதிகாரிகளின் அலட்சியம்தான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம். அது இதிலும் தொடரும்.

நாம என்னதான் சொன்னாலும் இது நடக்கதான் போகுது. ஏதோ நம்மால முடிஞ்சது புலம்புறதுதான். இந்த இணைப்பில் இருக்கறத ஒரு தடவை படிச்சிருங்க...அது இதுக்கும் சரியா வரும்...

http://anubhudhi.blogspot.com/2011/11/blog-post_10.html

பகிர்வுக்கு மிக்க நன்றி..

ELANGO T சொன்னது…

பல அடுக்கு மாடிக் கடைகளைப் பற்றி தாங்கள் சொன்னதெல்லாம் உண்மை. தங்கள் சொந்த ஜாதிக்காரர்களையே அடிமைகள் போன்று வைத்துள்ளனர். யாரும் கேள்வி கேட்பதில்லை.

வவ்வால் சொன்னது…

இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லி இருக்கலாம், ஆனாலும் நீங்கள் சொல்வது போல ஒரு மாற்றம் தேவையே, அது இத்தனை ஆண்டுகளாக வரவில்லை, இனியும் நம்ம ஆட்கள் தானாக கொண்டுவருவார்களா எனத்தெரியவில்லை, எனவே தான் அந்நியர்களாவது மாற்றம் தருவார்களா என எதிர் நோக்கி எதிர்க்க மனம் இல்லை.

பாரதியுடன் வால்மார்ட் ஏற்கனவே சேர்ந்துள்ளது மொத்தக்கொள்முதலில் ,கம்மோட்டி வகையில், கேஷ்&கேரி வகை.சில்லரை வர்த்தகத்தில் அல்ல. இனிமே தான் சில்லரைக்கு வர போறாங்க.

மேலும் இது சம்பந்தமாக இரண்டுப்பதிவுகள் நான் போட்டுள்ளேன், பார்க்கவும்.

வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்

வால்மார்ட்,கம்மோடிடி செயற்கைத்தட்டுப்பாடு சாத்தியமா

ராமய்யா... சொன்னது…

சரி பெப்சி கோகோ கோலா நிறுவனங்கள் வந்த போது 300 ml 5 Rs என சொல்லி 200 ml விற்ற நம் மாப்பிளை விநாயகர், gold spot, bovonto, campa cola, என எல்லா நிறுவனத்தையும் அழித்தார்கள்..

இப்போது நீங்களும் நானும் 10 rs குடுத்து அதே 200 ml உடலுக்கு தீங்கு செய்யும் பானத்தை குடிக்கிறோம்..

இதெல்லாம் வெளி நாட்டில் உள்ள கழிவுகளை சந்தைப் படுத்த வரும் கொள்ளைக்காரர்களின் வித்தை..

இதை ஆதரிப்பது கூடாது..
இது என் கருத்து மட்டுமே..

KARMA சொன்னது…

செந்தில்,
ஒரு சாமானியனின் கேள்வி இது.
இந்திய அரசாங்கத்தினால் அத்தியவசியப்பொருட்களின் விலையேற்றத்தை சமாளிக்க முடியவில்லை. அதனால் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு கதவை திறந்து
விடவேண்டும் என்கிறிர்கள். இது எப்படி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த உதவும்?
இந்த அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு உலகினில் வேறெங்கேனும் இதை சாதித்ததாக சான்ருள்ள்தா? அல்லது அவைகளின் லட்சியமே உலகில் விலையேற்றத்தினால் அவதியுறும் நாடுகளுக்கு கால் நடையாகச்சென்று அன்னை தெரசா போல் அற்பநித்தாலே தொழிலா?

இல்லை எப்போதும் போல் அரசியல் வியாதிகள் சொந்த நலனுக்காக நாட்டை கம்பெனிகளுக்கு அடகு வைக்கிறார்களா?

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

Good analytical post. Kalakkittinga CP.

நீச்சல்காரன் சொன்னது…

நம்மவர்கள் வரி ஏய்ப்பு, வாடிக்கையாளர் கவனிப்பின்மை, பணியாளர் உரிமை மறுப்பு ...போன்ற தவறுகளை களைய முறையான கண்காணிப்பை அமல்படுத்த வேண்டுமே தவிர அடுத்தவர்களை உள்ளே விடுவது நமது கையாலாகதனம் என தெரிகிறது. மொத்த கொள்முதல் மூலம் லாபம் அதிகரிக்கலாம், அதற்கு இந்திய நிறுவனங்களைத் தான் அனுமதிக்கணும்.

நம்மால் உற்பத்தியாக்க முடிந்த பணம் நம் சோம்பேறித்தனத்தால் அடுத்த நாட்டிற்கு செல்லும் என்கிற ஒரே விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலே அந்நிய முதலீடை தடை செய்யலாம்.

Kalai சொன்னது…

உண்மைதான். இது இரு முனைகளும் கூராக உள்ள கத்தி மாதிரிதான். ஒரு வகையில் இது கிட்டத்தட்ட "வெள்ளைக்காரனை விரட்டி விட்டு நம்ம ஆட்கள் ஆட்சிதான்." மெயின் ஆபீஸ் அமெரிக்காவாக இருந்தாலும், வேலை செய்யப் போவது மற்றும் லோக்கல் ஸ்டோர் முதலாளிகள் நம்ம ஆட்கள்தான். எனவே சரவணா ஸ்டோர் வகை ட்ரீட்மெண்ட் எந்த வகையிலும் மாறப் போவதில்லை-அமெரிக்காவில் ஏழ்மையான நகர்களில் உள்ள
வால்மார்ட்களைப் போல

Kalai சொன்னது…

உண்மைதான். இது இரு முனைகளும் கூராக உள்ள கத்தி மாதிரிதான். ஒரு வகையில் இது கிட்டத்தட்ட "வெள்ளைக்காரனை விரட்டி விட்டு நம்ம ஆட்கள் ஆட்சிதான்." மெயின் ஆபீஸ் அமெரிக்காவாக இருந்தாலும், வேலை செய்யப் போவது மற்றும் லோக்கல் ஸ்டோர் முதலாளிகள் நம்ம ஆட்கள்தான். எனவே சரவணா ஸ்டோர் வகை ட்ரீட்மெண்ட் எந்த வகையிலும் மாறப் போவதில்லை-அமெரிக்காவில் ஏழ்மையான நகர்களில் உள்ள
வால்மார்ட்களைப் போல.

There is a big difference in Walmart culture within America between the stores in poor and rich areas. Customer service in Walmarts located in poor areas are somewhat close to the treatment in stores in India.