17 டிச., 2011

அரசியல் பேசலாம் வாங்க...


சின்ன வயசுல கிராமத்து வாழ்க்கைல விவரம் அதிகம் தெரியாதபோது அப்பா காங்கிரஸ்காரர் என்பதால் எனக்கும் இந்திராகாந்தி, மற்றும் காங்கிரஸ்  கூட்டணியில் இருந்ததால் எம்.ஜி.ஆர் இருவரின் மேல் பிரியம் அதிகம். எங்கள் ஊருக்கு கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அரசியல் தலைவர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள். கலைஞர் தனது "நெஞ்சுக்கு நீதி" புத்தகத்தில் அவரின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையின்போது எங்கள் ஊருக்கு வந்தபோது, எனது அம்மா வழி தாத்தா சாமியார் என்கிற ஜெகதீச தேவர் பணம் தந்து உதவியதாக குறிப்பிட்டு இருக்கிறார். 

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியினரின் ஆதிக்கம் நிறைந்த எங்கள் ஊர், திராவிட இயக்கங்கள் வளர ஆரம்பித்தபின் தி.மு.க அதிகமாகவும் பின்னர் எம்.ஜி.ஆர் பிரிந்தபின்னர் அ.தி.மு.க அதிகமாகவும் மாறிவிட்டது. அப்போதெல்லாம் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடக்கும் தி.மு.க கூட்டங்கள்தான் பெரும்பாலும் களைகட்டும் பெரும்பாலும் நாகூர் ஹனீபா கச்சேரியோடு துவங்கும் கூட்டம், நாகூர் ஹனீபாவின் கணீர்க்குரலில் "கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" என பாட்டு கேட்க ஆரம்பித்ததுமே கூட்டம் உற்சாகமாகிவிடும். ஆனாலும் நன்னிலம் நடராசன், வெற்றிகொண்டான் போன்றோர்தான் கலைஞரை  விடவும் ஸ்டார் பேச்சாளர்களாக வலம் வந்தனர். செந்தமிழ் அவர்கள் நாவினிலிருந்து பச்சை பச்சையாய் கொட்டும். எனக்குத் தெரிந்தவரை அவர்களைவிடவும் அசிங்கமாய் ஒரு சமயம் நாஞ்சில் சம்பத் பேசக் கேட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட கூட்டங்களினால் ஈர்க்கப்பட்டு நானும் ஜனதா கட்சியை சார்ந்து பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அணில் சின்னத்தில் போட்டியிட்ட வல்லத்தரசு மாமாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுபோக உதவியிருக்கிறேன். மைக் கிடைத்த சந்தோசத்தில் நோட்டீசில் கொடுக்காத வாக்குறுதிகளை நானே கொடுத்து மக்களை மாற்றி ஓட்டுப் போடவைக்க காரணமாக இருந்திருக்கிறேன். 

எங்கள் ஊரில் குடுமபத்தலைவர் சொல்லும் கட்சிக்குதான் மொத்த குடும்பமே ஓட்டுப்போடவேண்டும். ஆனாலும் கட்சிக்கு ஒருத்தர் என குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் பிரித்து வைத்துக்கொண்டு வெட்டு குத்து ஆன சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன. போலிஸ் நிலையத்தில் வைத்தே கொலை செய்யும் அளவுக்கு  முட்டாள்கள் நிறைந்த என் ஊரில் அரசியல் அடிதடிகள் இப்போதெல்லாம் நடப்பது இல்லை. சமீப காலமாக சீமானுக்கும், விஜயகாந்துக்கும் நிறையபேர் அதிலும் முப்பது வயதுக்கு கீழே இருக்கும் வெட்டிப்பசங்க ப்ளெக்ஸ் வைத்திருப்பதை பார்க்க முடிந்தது. ரஜினி ரசிகர் மன்றத்தினர் விஜயகாந்த் கட்சிக்கு மாறிவிட்டனர். கேப்டன் கட்சி ஆட்களைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரும் தங்கள் தலைவனைப்போலவே பகல் குடிகாரர்களாக இருப்பதன் பொறுத்தம் ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஆனால் தமிழ் உணர்வுகள் நிறைந்த இளைஞர்கள்தான் சீமானை ஆதரிக்கிறார்கள். 

இப்போது தி.மு.க, அதி.மு.க வுக்கு இளைஞர்கள் அதிகம் போவது இல்லை. தி.மு.க வை பொறுத்தவரை அது ஒரு தனியார் நிறுவனம். முதலாளிக்கு சேவகம் செய்யும் பண்ணையாட்களாய் இருந்தால் மட்டுமே அங்கு இருக்க முடியும். தலைவர் முதல் மாவட்ட, நகர செயலாளர்வரை வாரிசுகள் கோலோச்சும் மன்னர் வம்சம் அது. அ.தி.மு.க வோ அடிமைகள் மட்டுமே இருக்க முடிகிற கட்சி. அங்குள்ள மந்திரிகளுக்கே பதவி அந்தரத்தில் ஊசல் ஆடுகிறது. இதில் தொண்டன் நிலை படுமோசம். எங்கள் பகுதியில் சசிகலாவின் தம்பி திவாகரன்தான் எல்லாம். கட்சிக்காரர்கள் அனைவரும் அவரை "பாஸ்" என்றுதான் அழைக்கிறார்கள். ஒரு காலத்தில் சிவானந்தா பட்டறையில் நண்பர்கள் படைசூழ அரட்டை கச்சேரி நடத்திக்கொண்டிருப்பார். இப்போது திருவாரூர் மாவட்டத்தின் கல்வித் தந்தையாகிவிட்டார்.

இவருக்கு போட்டியாக களம் இறங்கியிருக்கிறார் டி.ஆர்.பாலுவின் புதல்வர் டி.ஆர்.பி.ராஜா இவர் இன்னொரு கல்வித் தந்தை. சென்ற ஒரு வருடத்தில் மட்டும் ஐநூறு ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள். தற்போதைய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் இன்னொரு பியர் பாக்டரி ஆரம்பிக்கும் முயற்சியில் இருக்கிறார். 'குடி'மகன்கள் வாழ்த்தட்டும்.   

இதனால் இப்போது கேப்டன் கட்சிக்கு தாவும் இளைஞர்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றனர். கேப்டனும், அவரின் மனைவி, மச்சானோடு இன்னொரு தனியார் நிறுவனமாகவே அவர் கட்சியையும் நடத்திவருகிறார் என்பதை அறியாமல் அவர்தான் நாளைய விடிவெள்ளி என பேசுபவர்களை சுந்தர தெலுங்கில் திட்டுவதைவிட வேறு வழியில்லை. ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் கோலோச்சிக்கொண்டிருந்த ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டம் இப்போது மாறிவிட்டது. காரணம் கம்யூனிஸ்டுகளின் பக்கபலமே அங்கிருக்கும் தலித் கூலித்தொழிலாளிகள்தான் அவர்களும் திருமாவளவன் பக்கம் பெரும்பாலும் திசைமாறிவிட்டதால் இப்போது அங்கிருக்கும் ஆதிக்கசாதி (அதாங்க நாங்கதான்) கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். தலித்துகளில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்படை கேப்டன் கொடி பறக்கவிட ஆரம்பித்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். 

பி.ஜெ.பி யை திருவாரூர் மாவட்டத்தில் வளர்த்த முன்னோடிகளில் நானும் ஒருவன், அந்த கட்சி நன்றாக வளர்ந்து இல.கணேசன் எனும் பார்ப்பன பண்ணையாரால் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. இனி மத்தியில் பி.ஜெ.பி ஆட்சி ஒருவேளை வந்தால் பதவி பெருமைக்காக புதியதாக யாராவது சேரக்கூடும். இப்படியான அரசியல் நிகழ்வில் இப்போதெல்லாம் ஒரு வார்டு உறுப்பினராக போட்டியிடவே மூன்று லட்சமும், பஞ்சாயத்து தலைவராக போட்டியிட இருபது லட்சமும் செலவு செய்கிறார்கள். ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று கேட்டால் நூறு நாள் வேலை திட்டத்திலேயே செலவு பண்ணதை அள்ளிரலாம், மத்ததெல்லாம் லாபம்தான் என்கிறார்கள். இந்தமுறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சென்னையில்   போட்டியிடாமல் ஒதுங்கிய காரணமே அவர்கள் கட்சியின் வார்டு மெம்பர்கள்தான் காரணம் என்று நண்பர் சொன்னார். முன்னால் மேயர் மா.சு அவர்கள் எளிமையாய் எடுத்த நற்பெயரை வார்டு மெம்பர்கள் கெடுத்துவிட்டதாக நண்பர் சொன்னார்.

இப்படி முதல் போட்டு சம்பாதிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டபின் மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. மின்சாரம் இல்லையா? பொறுத்துக்கொள்கிறோம். பெட்ரோல் உயர்வா அதையும் பொறுத்துக்கொள்கிறோம், பக்கத்து மாநிலத்தான் தண்ணி தரவில்லையா அதனையும் பொறுத்துக்கொள்கிறோம். என பொறுத்துப் போக பழகிவிட்டனர். "பொறுத்தார் பூமி ஆள்வது" அந்தக்காலம். இப்போது "பூமி ஆள்வோரால் மக்கள் பொறுத்தார்" ஆகிவிட்டனர்.  இதில் மன்மோகன் சிங், சோனியா, அத்வானி, அன்னா அசாரே போன்ற காமெடியன்களை பார்க்கும்போது மக்களாட்சி இனி வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. 

வாழ்க ஜனநாயம்...

10 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

நீங்கள் உங்கள் ஊருக்குச் சொல்வது
பொதுவாக த்மிழகத்துக்கே சொல்வது போல்தான் உள்ளது
ஏமாறுவதில் வித்தியாசம் இல்லாதது மாதிரிஅரசியல் நிகழ்வுகளிலும் எந்த ஊரிலும்எந்த மாறுபாடும் இல்லாமல்தான் உள்ளது
தெளிவூட்டிப் போகும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

arumaiyaana anupava katturai

கோவி சொன்னது…

///தி.மு.க வை பொறுத்தவரை அது ஒரு தனியார் நிறுவனம். முதலாளிக்கு சேவகம் செய்யும் பண்ணையாட்களாய் இருந்தால் மட்டுமே அங்கு இருக்க முடியும். தலைவர் முதல் மாவட்ட, நகர செயலாளர்வரை வாரிசுகள் கோலோச்சும் மன்னர் வம்சம் அது. அ.தி.மு.க வோ அடிமைகள் மட்டுமே இருக்க முடிகிற கட்சி. ///

அதுதான் பாய்ன்ட்..

dheva சொன்னது…

மக்கள் புரட்சி ஒன்றே வழி...! அதுக்குன்னு தனியா ஒண்ணும் நாம செய்ய வேண்டியது இல்லை...

அரசியல்வாதிகள் செய்யும் அலும்புகளைப் பார்த்து பார்த்து தானே அது நிகழும்...என்ன ஒண்ணு அதுக்கு இன்னும் ஒரு 50 வருசம் கூட ஆகலாம்...! ஆனால்... இதே நிலைமை நீடித்தா அது கட்டாயம் நிகழும்...!

நன்றிகள் செந்தில்!

Sivakumar சொன்னது…

டி.ஆர்.பாலுவின் புதல்வர் டி.ஆர்.பி.ராஜா இவர் இன்னொரு கல்வித் தந்தை.//

ஸ்ஸ்ஸ்.. ஒரே புழுக்கம்!

vasan சொன்னது…

புத்திசாலியான நீங்க‌ளே, ஐந்து க‌ட்சி மாறி, இப்போ எதுவும் ந‌மக்கு உப‌யோக‌மில்லை என்கிற‌ தெளிவுக்கு இப்ப‌த்தான் வ‌ந்திருக்கிங்க‌. இதே மாதிரி கொஞ்ச‌ நாள்ல‌ அதிக‌ம் போர் தெளிஞ்சுட்டாங்க‌ன்னா (டாஸ்மாக் மாயையும் தெளிஞ்சு) நாட்டை மாற்றும்‌ ஆட்சி எது, ஏமாற்றும் க‌ட்சிக‌ள் (த‌லைவ‌ர்க‌ள்) யார் என்ற ஞான‌ம் வந்துவிடும். விழிபுற்ற‌ ச‌முதாய‌த்தை திருட‌ர்க‌ள் ஆள முடியாது.

ஆதி சொன்னது…

உரிமை இழந்தால் வாழ்வு இழப்பாய் தமிழா.... உரிமைக்கு இன்று உழைக்க மறுத்தால் நாளை வாழ்வே இழக்க நேரும். ஓன்றுசேர்வோம்,போராடுவோம்..... உரிமை காப்போம்

Unknown சொன்னது…

தொடர்ந்து சிறப்பான பதிவுகள் தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

Unknown சொன்னது…

மாற்றம் கண்டிப்பா வரும்...வர வைப்போம்...நன்றி!

Unknown சொன்னது…

உலகில் மாற்றம் இல்லாதது மாற்றம் மட்டும் தான்
மாற்றம் வரும் என நம்புவோம்!

பத்திரர் இல்ல புத்திரார் இல்ல
யரோ பான பத்திரார்ம் கோவில்ல பஜனை பாடல்கள் பாடுபவராம் என்ற திருவிளையாடல் பட வசனம் ஞாபகம் வருகின்றது