4 செப்., 2012

கண்களில் உடையும் நதி...

போட்டோ: சுரேஷ்குமார் சிங்கப்பூர்
அலமாரியை சுத்தம் செய்த மனைவி
இந்தக் குப்பையெல்லாம்
துக்கிப் போட்டாத்தான் என்ன?” வென்றாள்.
என் காதலின் மிச்சங்கள்
அவையென
அவளுக்கும் தெரியும்
அவள்
தூக்கியெறிய மாட்டாள்!
என்னாலும் முடியாது!

தொலைபேசிகள் எட்டிப்பார்க்காத
கிராமத்துக் காலம் அது
வைரமுத்து சொன்னது போல்
தபால்காரன் தெய்வமாய் இருப்பான்.
அவசர அவசரமாய் எழுதுகிறேனென்று
என் கையெழுத்து மீது
எப்போதும் 
செல்லக் கோபம் அவளுக்கு.

குண்டு குண்டாக
நேர் கோட்டில் எழுதியிருப்பாள்
அவள்.
வரிக்குதிரையாய் இருக்கும்
அத்தனை வரிகளும்
அப்போது மனப்பாடம்
வாரத்திற்கு ஆறு கடிதம்
அவளுக்கு நானும்
எனக்கு அவளும்
அத்தனையும் காவியங்கள்

ஒழுகும் மழை நீராய்
காதல்
எங்களை
கடிதங்களால் உயிர்பித்தது
சாமிக்கு நேர்ந்த
வளர்ப்பு கிடாயென
என்னை
வாக்குக்கு பலியாக்கினார் 
அப்பா.

நேரில் சந்தித்து
நிலைமையை விளக்கியபோது,
பரவாயில்லை விடென்றாள்
அவள் கண்களில் இருந்து
உடைந்தது ஒரு நதி.

இப்போது
ஒவ்வொரு கடிதமாய்
திரும்பப்
படித்துக் கொண்டிருக்கிறேன்
அந்துப் பூச்சிகள்
மலம் கழித்த அவைகள்
ஒரு கையாலாகதவனின்
சமாதியாய் தெரிகிறது..

7 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அந்துப் பூச்சிகள்
மலம் கழித்த அவைகள்
ஒரு கையாலாகதவனின்
சமாதியாய் தெரிகிறது.. //

ஆற்றாமையை இதைவிட
அழகாகச் சொல்லமுடியாது
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

Unknown சொன்னது…

அந்த கடைசி வரிகள் அருமை. நன்றி

வல்லிசிம்ஹன் சொன்னது…

சில காதல்களுக்கு அடையாளங்கள் உண்டு.
நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்.
அருமையான எழுத்து.வாழ்த்துகள்

தேடல் சொன்னது…

திரு krp அவர்கலு நன்றி
என்னையும் எனது photo வையும்
ஊக்க பதியட்துகு....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அவள் கண்களில் இருந்து உடைந்தது ஒரு நதி.

பிரவகித்த வெள்ளமாய் உணர்ச்சிகளின் தொகுப்பு ....!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அந்துப் பூச்சிகள்
மலம் கழித்த அவைகள்
ஒரு கையாலாகதவனின்
சமாதியாய் தெரிகிறது.. //
அருமையான வரிகள்! அருமையான கவிதை! பகிர்வுக்கு நன்றி!