Photo KRP Senthil |
இருபது வருடங்களில் ஊரில் பெரிதாக மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. வீடுகள் ஒன்றிரண்டு மெயின் ரோட்டின் அருகிலேயே முளைத்திருக்கின்றன. சாலை தார் போடப்பட்டு இருக்கிறது. முன்பு மண் சாலையாக இருக்கும். இருபுறமும் இன்னும் மாறாத பொட்டல் காடு. ஆனால் பழைய பனை மரங்களை நிறைய பார்க்க முடியவில்லை. இப்போது ஆங்காங்கே குட்டியாக மாடி வீடுகள் இருக்கின்றன.
இப்போது என்னை யாருக்கும் அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அப்போது ஏழு வயது என்று ஞாபகம், பள்ளியில் சக நண்பனை ஒரு சண்டையில் சிலேட்டால் மண்டையை உடைத்து விட்டேன். தலையில் இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்ததை பார்த்ததும் பதட்டமாகி ஓட ஆரம்பித்தேன். அப்படியே பல ஊர்கள், மாநிலங்கள் என போகாத இடமில்லை. காலம் என்னை தன்னோடு சேர்த்து இழுத்துக்கொண்டு ஓடியது. எத்தனை மொழிகள், எத்தனை மனிதர்கள், எத்தனை பிரச்சனைகள், சந்தோசங்கள் என வாழ்வின் அத்தனை பக்கங்களையும் பலமுறை படித்தேன்.
போன மாதம் வரைக்குமே என் ஊர், சொந்தம் என எதையுமே நினைத்துப்பார்க்கவில்லை. ஆனால் திடீரென ஒரு நாள் ஊருக்குப்போனால் என்ன எனும் ஆவல் தோன்றியது. போனால் என்னை ஏற்றுக்கொள்வார்களா?. நான் மண்டை உடைத்த பையன் இப்போது என்னைப்பார்த்தால் என்ன சொல்லுவான் என பலவாறு ஓடிய சிந்தனைகள் என்னை ஊரை நோக்கி விரட்டியது. கையிலிருக்கும் பணம் போதுமானதாக இருக்கவே மும்பையில் இருந்து ரயில் ஏறிவிட்டேன். இதோ என் வீட்டின் அருகே வந்தும் விட்டேன்.
ஆனால், என் வீட்டில் ஒரு பெரிய சண்டை நடந்துகொண்டிருந்தது. நாம் வந்த நேரம் அப்படி என நினைத்துக்கொண்டே சாலையின் எதிரே இருந்த டீக்கடைக்குள் நுழைந்தேன். அது பெரியசாமி தேவர் டீக்கடை. இப்போது பெரியசாமி தேவர் புகைப்படத்தில் “எங்கள் இதய தெய்வம்” என்று எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தார். அவரின் மூத்த மகன்தான் டீ ஆற்றிக்கொண்டிருந்தார். அங்கிருக்கும் யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை. ஒரு பெரிசு மட்டும் “தம்பி என்ன சோலியா வந்திருக்காப்ல?” என்றது. நான் பதிலேதும் சொல்லாமல் ஒரு டீ சொல்லிவிட்டு அமர்ந்தேன். அப்போது என் வீட்டிலிருந்து ஒரு பெண்மணி ஓடிவந்தார். உற்றுப்பார்த்தேன். என அம்மாதான் அது. உடல் மெலிந்து தலை நரை போட்டிருந்தது. ஆவேசமாக கையிலிருக்கும் லோட்டாவை டீக்கடையில் வைத்து விட்டு “ஒரு டீ பார்சல் கொடுடா!” என்றார்.
”ஏன் கெழவி இப்படி மருமவளோட மல்லுக்கு நிக்குறே, பேசாம நீயும் ஒம்புருஷனும் கொல்லையிலே வீடு கட்டிகிட்டு போலாம்லே” என்றது ஒரு பெரிசு.
“ஆமாம் எம்புருஷன் வூடு கட்டி வப்பான், இவளுக வந்து குடித்தனம் செய்வாளுகளாக்கும், நீயி அவளுக கிட்டே வந்து நாயம் பேச வேண்டியதுதானே!”
ஒங்கிட்ட பேசலாம், அவளுக வாயி அகண்டு போயில்ல பேசுறாளுக, ஆனா ஒன்னோட சின்ன மவென் இருந்தா ஒன்னெ இப்புடி வச்சு பாத்துருக்க மாட்டான்” என்றார். எனக்கு என்னவோ போலிருந்தது.
”ஆமா அந்த நாயி ஒருத்திய இழுத்தாந்து அவ ஒரு பக்கம் என் மயித்த பிடிக்கவா, நீ அவன வேற கூப்பிடுறே” என்றதும் நான் என் டீக்கான காசை நீட்டினேன். அம்மாவின் டீக்கும் காசை எடுத்துக்கொள்ள சொன்னேன்.
”இங்க பாறேன் பெத்ததுவோ ரோட்டுல விட்ருச்சு, ரோட்டுல போறவன் டீ வாங்கி கொடுக்குறான்” என்று புலம்பியபடி வீட்டினுள் நுழைந்து தன் சண்டையை தொடர்ந்தாள்.
வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது. நான் திரும்பி மெயின் ரோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மெயின் ரோட்டில் ஒரு லாரியை நிறுத்தி ஏறிக்கொண்டேன். இருள் மூடிய சாலையை தன் விளக்கால் வழிதேடியபடி ஓடிக்கொண்டிருந்தது லாரி. சினேகமாக ஒரு புன்னகையுடன் “பாட்டு கேக்கிறியளா?” என்றபடி ரேடியோவை ஆன் செய்தார் டிரைவர். “கலங்காதிரு மனமே” என பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. டிரைவர் என்னைப்பார்த்து ”எப்பவும் பழசு மாதிரி வராது இல்லீங்களா?, எனக்கு பழய பாட்டுதான் புடிக்கும், தம்பிக்கு எப்புடி?” என பேச ஆரம்பித்தார். என்னிடமிருந்து வந்த புன்னகையை ஆமோதிப்பாய் எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கையை என் முன் விரித்தார்.
இனி அடுத்து எந்த ஊருக்குப்போகலாம் என்கிற கேள்வி அவரின் பேச்சின் ஊடே என்னை துளைத்துக்கொண்டிருந்தது. திருச்சி மெயின் ரோட்டில் லாரி திரும்பியதும். “கொஞ்சம் தூங்குறியளா?, சாப்பாட்டுக்கு நிறுத்தறப்ப எழுப்புறேன்” என்று தன் இருக்கையின் பின் பக்கம் கைகாட்டினார். நான் படுத்து கண்களை மூடினேன். கண்களுக்குள் என் அம்மாவின் உருவம் திரையிட்டது. வாழ்க்கையில் முதன்முறையாக அழ ஆரம்பிக்கிறேன்.
3 கருத்துகள்:
arumai annaa..
கண்ணுல பொசுக்குன்னு கண்ணீர் வந்துருச்சு அண்ணே....!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........................
கருத்துரையிடுக