13 ஆக., 2013

ஜீவிதா... (மீள் பதிவு)


அன்புள்ள ஜீவிதாவிற்கு, நலமாக இருக்கீங்களா?. கதிரவன் தன்னுடைய அந்த நீண்ட கடிதத்தின் இறுதியில் நீங்கள் அமெரிக்கா சென்றுவிட்டதாக எழுதியிருந்தார். அவர் எழுதியது மற்றவர்களுக்கு வேண்டுமானால் நாவலாக இருக்கலாம். ஆனால் அது உங்களுக்கான கடிதம். எனக்கும் அப்படித்தான்.அது தன் உதிரத்தை வார்த்தைகளாக்கிய ஓவியம். அமெரிக்க வேலை உங்களுக்கு பிடித்திருக்கும். மிகவும் விரும்பித்தானே அங்கு போனீர்கள். நீங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையல்லவா அது. ஆனால் பாவம் கதிரவன் அவருக்கு வரைவது, கவிதை எழுதுவது அப்புறம் காதலிப்பது.. காதலிப்பது...காதலிப்பது இது தவிற வேறெதுவும் தெரியாத ஆத்மா அது. அதனால்தான் இணைய மைய்யத்துக்கு வந்து வாழ்த்துக்களாகவும், வரைந்த படங்களாகவும் அனுப்பிக்கொண்டிருக்கிறார். அவைகள் உங்களால் படிக்கப்படாமலே நீக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவர் பெயரிட்ட மின்னஞ்சல்கள் SPAM க்கு தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் கணிணி அறிவு பற்றி எதுவும் அறியாத அந்த அப்பாவி இப்போதும் உங்களுக்கு மின்ஞ்சல் அணுப்பிக்கொண்டிருப்பார்.
வரைந்தாலும் கவி எழுதினாலும் அதிலும் நீங்களே ஜீவிதமாக இருப்பது அவருக்கும் உங்களுக்கும் மட்டுமே தெரியும். குழந்தைகளை , பூனைக்குட்டிகளை, சுலைமான சேட் எனும் நஜ்மாவின் அப்பாவை, கான் முகம்மதுவை, பாலகிருஷ்ணனை, ரயிலில் மகனின் கொலையால் கதறும் கிழவியை என கதிரவன் உலகம் எளிய மனிதர்களுக்கானது. நீங்கள் உயரிய படிப்பை முடித்தவராய் இருக்கலாம், உங்கள் அம்மா மருத்துவராகவோ, உங்கள் பாட்டனார் நீதிபதியாகவோ இருந்திருக்கலாம். ஆனால் ஒருபோதும் உங்களால் கதிரவன் ஆக முடியாது. ஏன்? யாராலுமே கதிரவனாய் ஆக முடியாது.

உங்கள் பொருட்டு தன்னை மிரட்டிய மணிகண்டனையும், கன்னத்தில் அறைந்த ராகவனையும் அவர் உங்கள் பொருட்டே பொருத்துக்கொண்டார். தன் ஒரு கன்னத்தில் அறைந்த ராகவனுக்கு அவர் இன்னொரு கன்னத்திலும் அடி வாங்கத் தயாராக இருந்தார். ராகவன் தன்னை தாக்கபோகிறான் எனத் தெரிந்து மொட்டைமாடியின் விளிம்புவரை போனவரை அந்த அப்பாவி தன்னை திருப்பித் தாக்கமாட்டார் எனத் தெரிந்துகொண்டு அவரை அளவுக்கு அதிகமாக மிரட்டி கடைசியில் உதடு கிழியும் அளவு அறைந்தபோதும் உங்கள் மீதான காதலே கதிரவனை அமைதியாக்கியது. தான் இரவுகளை நேசிப்பவன் என்பதால் தான் வரைவதை இரவுகளில் தொடங்கும் அவரின் சிறிய அறையில் கற்களை வீசி எறியும் இளைஞர்களைக் கூட அவர் பொருத்துக்கொண்டார்.

ஒரு எளிய கலைஞனுக்கு தன்னை ஒரு பெண் பாராட்டினாள் என்கிறவுடன் வருகிற பரவசத்தையும் தாண்டி அவர் உங்களை முகம் பார்க்காமலே நேசிக்கத் துவங்குகிறார். அவர் கூச்சம் மிகுந்தவர் என்பதையும் தாண்டி உங்களிடம் பேச விரும்புகிறார். நீங்களும் அதை விரும்புகிறீர்கள். அவர் தன் சகல வாழ்வையும் நீங்களாக மாற்றிக்கொள்கிறார். எப்போது அவர் உங்களை சந்திக்க நேர்ந்தாலும் காதலின் அதீத பரவசம் அவரால் உங்களிடம் பேசவிடாமல் தடுக்கிறது. தொலைபேசியில் கூட உங்கள் குரலை கேட்பதற்க்குள்ளான அவரின் அவஸ்த்தையைவிடவும் உங்கள் குரலை கேட்டபின்னான ஆனந்தம் அவரை ஊமையாக்குகிறது.  இந்த உலகின் புனிதமான காதல்கள் என ஏகப்பட்ட காதலர்களின் காதல்கள் காவியங்களாக மாறின. அதில் பெரும்பாலனவை தோற்றுப்போனவையே. மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய கல்லறையை விடவும் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் கதிரவனின் கடிதம். காதலர்கள் தோற்றுபோயிருக்கலாம் காதல் எப்போதும் பரிசுத்தமாகவே இருக்கிறது. கதிரவன் போல் அவ்வப்போது ஆசிர்வதிக்கப்பட்டு இவ்வுலகில்  காதல் ஒரு நிரந்தர புனிதத்தன்மை அடைந்துவிட்டது.

ஜீவிதா இதுவரை நீங்கள் அந்தக் கடித்ததை படித்திருக்க மாட்டீர்கள். ஒரே ஒருமுறை மட்டும் அந்தக் கடிதத்தை வாசித்துப்பாருங்கள் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திலும் ஜீவிதா நீங்களே இருக்கிறீர்கள். இப்படி ஒரு காதலை, அர்ப்பணிப்பை, அன்பை, விட்டுக்கொடுத்தலை நாம் கதைகளால் மட்டுமே புணைய முடியும். அளப்பறிய பிரியம் என்பதை ஜீவிதா இதற்கு முன் உங்களால் அறிந்திருக்க முடியாது. உங்களுக்கே தெரியும் ஜீவிதா நீங்களும் அவரை காதலிக்கிறீர்கள் அல்லது காதலித்தீர்கள். யாரோ சிலர் அது மணிகண்டனாகவோ, ராகவனாகவோ கூட இருக்கலாம் அவர்கள் உங்களை தவறாக வழி நடத்தியிருக்கிறார்கள். வெறும் பணம் மட்டுமே வாழ்வை சுகப்படுத்திவிடாது ஜீவிதா, பணம் சுயநலத்தையும், பொறாமையும், வெறுப்பையுமே சம்பாதித்து கொடுக்கும் அது ஒரு போதும் தூய்மையான காதலை அண்டவிடாது. எனவே தயவு செய்து கருணை காட்டுங்கள் ஜீவிதா.
 
இணையம் வழி வரும் என் கடிதம் யார் மூலமாகவாவது உங்களுக்கு கிடைக்கப்பெறலாம். அப்போது கதிரவனைப்போல் இதனையும் ஒதுக்கிவிடாமல் படிப்பீர்கள் என நம்புகிறேன். இதில் நான் மன்றாடுவது ஒன்றே ஒன்றைத்தான் அது கதிரவனின் கடிதத்தை ஒரு முறை படித்துப்பாருங்கள். முதல் வரியில் துவங்கி இறுதி வரி வரை உங்களால் முழுதும் படிக்காமல் கீழே வைக்க முடியாது. ஒருவேளை இப்போது உங்களுக்கு ஒரு காதலன் இருக்கலாம். அல்லது திருமணம் முடிந்து கணவனுடன் இருக்கலாம். அப்படி இருந்தால் இப்போதுதான் கதிரவனின் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டிய சரியான தருணம் இதுதான். இதுவரை உங்கள் காதலனால், கணவனால் காட்டப்படாத அன்பை தரிசிக்கும் வாய்ப்பு ஒருமுறையாவது உங்களுக்கு கிட்டட்டும்.
கதிரவன் இப்போதும் உங்களிடம் இருந்து எதையும் யாசிக்கவில்லை. ஏன்? உங்கள் அன்பை, காதலைக் கூட யாசிக்கவில்லை!. அவர் இவ்வுலகில் வாழும் மட்டும் ஒரே ஒரு பெயர் மட்டும் போதும் ஜீவிதா. உங்கள் பெயரை உச்சரித்தபடியே அவர் தன் இறுதி மூச்சுவரை காலம் தள்ளிவிடுவார். அவர் விரும்புவதெல்லாம் எப்போதும்போல் ஒரு ரசிகையாக தொடர்ந்து அவரை பாராட்டி வருவதுதான். இதனை செய்வதில் உங்களிடம் ஏன்? இவ்வளவு தயக்கம்!. ஒரு நல்ல ஜீவனை சிகரெட்டுகளாலும், மதுவாலும் கொன்று வருவது நீங்கள்தான் ஜீவிதா. காலம் அவரை தின்று தீர்ப்பதற்கு முன் ஒரே ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்பிவையுங்கள். நீங்கள் நலமாக இருப்பதை சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு காதல் இருந்தாலோ, மணமாகி இருந்தாலோ அவரிடம் நிலமையை சொல்லுங்கள். ஒரு தோழியாகவாவது கதிரவனுடன் தொடர்ந்து உரையாடுங்கள்.
உங்களுக்கு வேண்டுமானால் கதிரவன் தேவையற்றவராக போயிருக்கலாம், ஆனால் எங்களைப்போல் அவரின் ஓவியங்களுக்கும், கவிதைகளுக்கும், இதோ உங்களுக்கு எழுதிய அந்த நீண்ட கடிதத்துக்கு ரசிகர்களாய் இருப்பவர்களுக்கு அவர் தேவை ஜீவிதா. மீண்டும் மீண்டும் இறைஞ்சுகிறேன் ஜீவிதா. அவருக்கு ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

அன்புடன்,  
கே.ஆர்.பி.செந்தில்.
                                                                          
குறிப்பு : யூமா.வாசுகி எழுதிய மஞ்சள் வெயில் நாவலின் தாக்கமே இந்தக் கடிதம். நீங்கள் காதலித்திருக்கலாம், காதலிக்கப்பட்டிருக்கலாம், காதலில் ஜெயித்தோ, தோற்றோ போயிருக்கலாம், இனிமேல்தான் காதலிக்கவே ஆரம்பிக்கலாம், காதலிக்காமலேயே திருமணத்துக்கு பின்னும் கூட உங்கள் மனைவியை சரியாக நேசிக்காமல் இருக்கலாம். எப்படி இருந்தால் என்ன!. இது காதலிக்கும் ஆண்களுக்கான இலக்கியம். எளிய நடையில் யூமா.வாசுகி நம்மை ஜீவிதாவுடனான கதிரவனின் காதலை அதனால் அவர் படும் அவஸ்தைகளை, வார்த்தைகளை உயிராக்கியிருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், பேரன்பும் யூமா.வாசுகி அவர்களுக்கு
. 
நாவல்: மஞ்சள் வெயில்
ஆசிரியர்: யூமா.வாசுகி
வெளியீடு: அகல், 
342,டி.டி.கே சாலை, 
இராயப்பேட்டை, சென்னை – 14.
தொலைபேசி: 044-28115584
விலை: ரூ.65.00


2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

உங்கள் நடையில் அருமையானதொரு கடிதம்...

வாழ்த்துக்கள்.

Balaji.paari சொன்னது…

arumai. NandrikaL.