14 டிச., 2010

ஒரு மில்லியன் டாலர் ...

கடந்த ஒரு வாரமாக மிகுந்த உடல் பிணியால் அவதிப்பட்டதால் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை.  இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இரண்டு நாளுக்கு முன்னதாக என் நெருங்கிய நண்பர் எனக்கு போன் செய்து ஒரு முக்கியமான விசயம் பேசவேண்டும் என்கிற பீடிகையுடன் ஆரம்பித்தார். என்ன விசயம் என்றால் தன்னிடம் இருக்கும் யு.எஸ் டாலர்களை மாற்ற வேண்டும், அதற்காக உங்கள் உதவி தேவை என்றார். சட்டபூர்வமாக வெளிநாட்டு கரன்சிகளை மாற்ற வேண்டும் எனில் உங்களிடம் வெளிநாடு சென்று திரும்பியதற்கான அத்தாட்சி இருக்க வேண்டும். ஆனால் பர்மா பஜார் போன்ற இடங்களில் குறிப்பிட்ட அளவு தொகையை அத்தாட்சி எதுவும் இல்லாமல் வாங்கிக்கொள்வார்கள். அப்படி சிலரை எனக்குத்தெரியும் என்பதால் நண்பர் என்னை அணுகியிருக்கலாம் என நினைத்து எவ்வளவு டாலர் கைவசம் இருக்கு என்றேன். ஒரு மில்லியன் டாலர் என்றார், என் உடல் அசதியையும் மீறி நான் சத்தமாக சிரிக்கவும், அண்ணே ஏன்னே சிரிக்கிறீங்க என்றார். இல்ல தம்பி உங்களிடம் இருக்கும் ஒரு மில்லியன் டாலரும் ஒரே நோட்டா இருக்குமே என்றதும், "ஆமாண்ணே எப்புடி கரெக்டா சொல்றீங்க" என்றார். 


1957 வாக்கில் அமெரிக்காவின் பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கிளப்களில் ஒன்றுதான் "மில்லியன் டாலர் கிளப்" இதில் சேரும் தகுதி என்னவென்றால் ஒரு மில்லியன் டாலருக்கு மேலாக சொத்து வைத்திருப்பவர்கள் மட்டும் சேரலாம். அப்படி சேரும் உறுப்பினர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் நோட்டை படமாக போட்டு ஒரு சான்றிதழ் தருவார்கள். அந்த சான்றிதழின் ஒரு நகல்தான் ( ஆமாம் ஒரிஜினல் கூட கிடையாது) நண்பரின் கையில் இருப்பது. இன்றைய தேதியில் மில்லியன் டாலர் சொத்து என்பது நான்காம் உலக நாடுகளில் இருப்பவர்களிடம் கூட இருப்பதால், அமெரிக்காவில் இதன் வடிவம் மாறிவிட்டது. ஆனால் எண்பதுகளில் இதன் ஒரு காப்பி எப்படியோ இந்தியாவுக்குள் வந்து தமிழகத்தின் பெரிய புள்ளிகள் வசம் சுற்றியது. அப்போதே என் மாமா ஒருவர் இந்த பணத்தை மாற்ற அலைந்ததில் அவருக்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகி ஒரு கட்டத்தில் அது என்னிடம் வந்து அப்போதே நான் விசாரித்து தெரிந்து கொண்ட விசயம்தான் இந்த மில்லியன் டாலர் கிளப் பற்றியும் அதன் விவரங்களும் அதன்பிறகு இன்றுவரைக்கும் பலபேர் இதுபற்றி என்னிடம் ஏதோ ஒருவகையில் இதைப்பற்றி விசாரித்துக்கொண்டு இருக்கவே செய்கிறார்கள்.



அமெரிக்க டாலர் என்பது ஒன்று, ஐந்து, பத்து, இருபது, ஐம்பது, நூறு என்ற மதிப்புகளில் மட்டுமே இருக்கும். எல்லா நோட்டுகளின் அளவும் ஒரே மாதிரி இருக்கும். கள்ள நோட்டு புழக்கத்தில் வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அதன் உள்நாட்டை பொறுத்தவரையில் பணப்பரிமாற்றங்கள் கார்டுகளில்தான் இருக்கும் என்பதாலும் அப்படி ஒரு ஏற்பாடு. சீட்டிங் செய்வது இன்றைக்கு வலையுலகம் வந்தபின் எக்கச்சக்கமாய் வந்துவிட்டாலும், அதிலும் நைஜீரியா ஆட்கள் மெயில் வைத்திருக்கும் அத்தனை பேருக்கும் தங்கள் திருவிளையாடல்களை அனுப்பியிருப்பார்கள். பெரும்பாலும் இப்படி ஏமாந்து போவதே அதிகம் படித்தவர்கள்தான். முகம் தெரியாத ஒருத்தன் நமக்கு ஏன் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றெலாம் யோசிக்காமல் அவன் விரித்த வலையில் சிக்கி குறைந்த பட்சம் ஐநூறு டாலர்களாவது இழந்தவர்கள் அதிகம். எல்லோருக்கும் சுலபமாக பணம் சம்பாதிக்கும் ஆசை வந்துவிட்டதால் இம்மாதிரி ஏமாற்றும் கும்பலும் அதிகமாகிவிட்டன. நாம் நம் உழைப்பை தகுந்த திட்டமிடல்களுடன் செய்வதில்லை. தொலை நோக்கு பார்வைகளும் நம்மிடம் இல்லாது போய்விட்டது. உடனடியாக பலன் கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் தாரக மந்திரமாக இருக்கிறது. 



நண்பருக்கு அனைத்தையும் விளக்கி சொன்னேன். அதன்பிறகும் அவர் என்னை நம்பாத மாதிரிதான் தெரிந்தது. தான் இதுவரைக்கும் இது சம்பந்தமாக இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்துவிட்டதாகவும், அது கிடைச்சா கூட பராவாயில்லை என்றார். ஒரு மில்லியன் டாலர் தன் கையில் இருப்பதாக நினைததபோது எவ்வளவு கனவு கண்டிருப்பார். அது வெற்றுதாள்தான் என அறிந்தபின்னும் அதற்கு செலவு செய்த பணம் மட்டும் கிடைத்தால் போதும் என்று சொன்னபோது அவரின் அறியாமையை நினைத்து வருத்தமாக இருந்தது.இன்னும் நிறைய இளைஞர்களும் இந்த ஏமாற்று மோசடியில் சிக்கி வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பது பெருங்கொடுமை.



இன்னும் வேறுவகையான மோசடிகளும் இருக்கின்றன. ஸ்க்ராப் மார்க்கெட் என்று ஒன்று உண்டு. அதில் ஒரு வகையான மோசடி என்னவென்றால் "ஐநூறுகோடி ரூபாய் மதிப்பான ஸ்க்ராப் இருக்கிறது. ரொம்ப சீப்பாக 10 கோடியில் முடித்துவிடலாம்" என்பார்கள். முதலாமவர் அடுத்தவரிடம் சொல்ல அவர் இன்னொருவரிடம் சொல்ல என்று இது ஒரு சங்கிலி மாதிரி போய்க்கொண்டே இருக்கும். மெனக்கெட்டு லாட்ஜில் ரூமெல்லாம் போட்டு சீரியஸ் டிஸ்கஷன் வேறு நடக்கும். ஆளாளுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று செலவாவதுதான் மிச்சம். கடைசியில் வேதனையான காமெடி என்னவென்றால் இந்த மாதிரி மோசடிகளில் வாங்குவரும் விற்பவரும்(seller &buyer) ஒரே ஆளாகத்தான் இருந்து தொலைவார்.



அடுத்துப் பார்த்தால் மண்ணுளிப்பாம்பு, கருப்பு ரத்தமுள்ள பூனை இவற்றைப் பிடிக்க ஒரு கும்பலே அலைந்து கொண்டிருக்கிறது. இவர்கள் பின்னால் ஏராளமான அப்பாவிகள் பத்துபைசாவுக்குக் கூட பிரயோசனமின்றி அலைவார்கள். கொஞ்சநாள் லட்சாதிபதி கனவில் மிதந்ததுதான் மிச்சம்.




இது சம்பந்தமாக எழுத நினைத்தபோதுதான் ஒரு ரியல் எஸ்டேட் மோசடியும், பேராவூரணிக்காரர்கள் செய்யும் பைனான்ஸ் மோசடியும் நினைவுக்கு வந்தது அதனை நாளை எழுதுகிறேன்..

31 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

நல்ல போஸ்ட். நான் கூட மூணு வருஷம் முன்னாடி ஒன் மில்லியன் துருக்கி லிரா பின்னாடி சுத்திட்டு இருந்தேன். அது ஒரு சோகக்கதை.

சசிகுமார் சொன்னது…

படிப்பதற்கு சிரிப்பாகவும் அதே சமயம் இவர்களின் பேராசையை நினைத்தால் கோபமாகவும் உள்ளது. இதிலும் படித்தவன் தான் அதிகம் ஏமாறுகிறான் என்று நினைக்கும் போது வேதனையாகவும் உள்ளது.

மாணவன் சொன்னது…

நல்ல விழிப்புணர்வுடன் சிந்திக்ககூடிய தகவல்களை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அண்ணே,

தொடருங்கள்.........

மாணவன் சொன்னது…

//கடந்த ஒரு வாரமாக மிகுந்த உடல் பிணியால் அவதிப்பட்டதால் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. இப்போது கொஞ்சம் பரவாயில்லை//

தங்களது உடல்நலம் விரைவில் குணமாக வேண்டும்.....

sangakavi சொன்னது…

அனைவரும் அறிய வேண்டிய விசயம்...

Unknown சொன்னது…

நல்ல பதிவு! ஆனா இப்போ இதெல்லாம் குறைந்துவிட்டது என்றே நினைக்கிறேன். ஜிமெயில் பாவிப்பவர்களுக்கு இப்படியான தொல்லைகள் குறைவென்றே நினைக்கிறேன்! யாஹூ, ஹொட்மெயில் இல்தான் அதிகம்! :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

எப்படி யெல்லாம் யோசனை பண்றாங்க.. ஹா.ஹா...

அருண் பிரசாத் சொன்னது…

அட இப்படி கூட நடக்குதா?

அந்த மில்லியன் டாலர் படத்தை போட்டு இருந்தா பார்த்தாவது இருக்கலாம்...

arasan சொன்னது…

நல்ல பதிவு ... நல்லா இருக்குங்க

சிவானந்தம் சொன்னது…

காமெடி + சில சுவாரசியமான செய்திகள். போரடிக்காத பதிவு.

Unknown சொன்னது…

கேள்விப்படாத விஷயம் அண்ணே..அதன் நகல் போட்டு இருந்தால் தெரிந்து கொண்டிருக்கலாம்.
பரவாயில்லை..
எப்படி சுகம் அண்ணே??
இப்ப ஓக்கேயா?

ஹேமா சொன்னது…

மண்ணுளிப்பாம்புன்னா பிடிக்கலாம்.கருப்பு ரத்தமுள்ள பூனை இருக்கா செந்தில் !

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

என்னடா ஒருவாரமா ஆள காணமேன்னு பார்த்தேன் ! உடல்நிலை இப்போ எப்படி உள்ளது ?
நல்ல பதிவு செந்தில் அவர்களே ! இடிதாங்கி , கோபுர கலசம் , பழைய ஒரு ரூபா நோட்டு
வெளிநாட்டு பிளாக் மணி இப்படீன்னு ஒரு கும்பல் அலைஞ்சுகிட்டு இருக்கு .என் நண்பர்
ஒருவர் இப்படிதான் நைஜீரியா ஆசாமிகளிடம் பத்தாயிரம் ருபாய் ஏமாந்தார் .

dheva சொன்னது…

அப்பாடி.........

இப்டி எல்லாம் இருக்கா செந்தில்..........! அச்சோ ஒண்ணுமே தெரியாது செந்தில் எனக்கு.. செம் இன்ட்ரஸ்டிங் ஆன செய்திகள். ஊருல செட்டில் ஆகுறதுகு முன்னல செந்தில் கிட்ட யோசனை கேக்காம காலடி எடுத்து வைக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். 10 வருச அமீரக வாழ்க்கைல ஊருல என்ன நடக்குதுன்னே புரியல செந்தில் கம்ளீட்டா ஜீரோவா இருக்க்கேன்....!

கடந்த வாரம் ஃபுல்லா நினைச்சேன் செந்தில் எங்க உங்க புழக்கத்தை காணோமேன்னு.... சோ. உடம்பு சரியில்லைனு இப்போதான் தெரியுது.....! டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த் செந்தில்............

!

தினேஷ்குமார் சொன்னது…

நல்ல பதிவு அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

நான் ஒரு முறை பாண்டிச்சேரியில் வேலை முடித்து விட்டு இரவு 10 மணி இருக்கும் எங்க ஊருக்கு வர கடலூர் தாண்டிதான் வரணும் குறுக்கு வழி மருதாடு தென்பெண்ணை அணைக்கட்டு வழியாக வந்து கொண்டிருந்தோம் நானும் என் நண்பரும் ஆற்றைக்கடந்து வந்துகொண்டிருந்தோம் மறுகரையில் நல்ல வெளிச்சம் சரி போலீசா இருக்கும் நு கிட்டப்போயட்டோம் பார்த்தா ஒரு ஓம்னி வேன்ல நாளு பேர் மனவெளிப்பாம்பு ஒன்றை பிடிக்கறதுக்கு முயற்சி செய்த்துகிட்டு இருந்தாங்க ஆனா ஆளுங்கள பார்த்தா நம்ம ஊர் ஆளுங்க மாதிரி தெரியல என்னபன்றது நாங்க போலீஸ் ஆகிட்டோம் அன்னைக்கு கையில இருந்த வண்டியும் அப்படி ஆளுங்கள ஒரு மிரட்டு மிரட்டி பாம்ப தப்பிக்க விட்டு துரத்தினோம் அவங்கள

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அனைவரும் அறிய வேண்டிய விசயம்...

Jackiesekar சொன்னது…

நல்ல விழிப்புனர்வு பதிவு

அன்பரசன் சொன்னது…

டாலர் நோட்டு மேட்டர் சூப்பர்.

Cable சங்கர் சொன்னது…

இதே போல பல உட்டாலக்கடி விஷயங்கள் இருக்கிறது.. மில்லியன் டாலர் மேட்டரை என்னிடம் ஒருவர் வ்ந்து கொடுத்து மாற்றச் சொன்ன போது நானும் இதைத்தான் சொன்னேன்.

வினோ சொன்னது…

இப்பொழுது நலமா அண்ணா?

மோசடியின் இன்னொரு முகம் :(

தமிழ் உதயம் சொன்னது…

நல்ல தகவல். டாலர் தகவல் அறியாத ஒன்று.

THOPPITHOPPI சொன்னது…

இவ்வளவு விஷயம் இருக்கா ?

RK நண்பன்.. சொன்னது…

anne arumayana vilippunarvu pathivu..
ithupola innum emathikku thaan irukanuka.. enga mapla kooda sundu viral size kurangu, rice pulling mathiri suthi thirinji lodge la adi thadi aaki, ippo kadaisiya thiruttu thanama londan la poi irukkar..

viraivil vudal nalam theri vara vendukiren..

Unknown சொன்னது…

நல்ல விழிப்புணர்வுப் பதிவு..

Chitra சொன்னது…

அடுத்துப் பார்த்தால் மண்ணுளிப்பாம்பு, கருப்பு ரத்தமுள்ள பூனை இவற்றைப் பிடிக்க ஒரு கும்பலே அலைந்து கொண்டிருக்கிறது. இவர்கள் பின்னால் ஏராளமான அப்பாவிகள் பத்துபைசாவுக்குக் கூட பிரயோசனமின்றி அலைவார்கள். கொஞ்சநாள் லட்சாதிபதி கனவில் மிதந்ததுதான் மிச்சம்.

...... :-(

அம்பிகா சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பகிர்வு. ஆனால் பேராசை தான் இத்தனைக்கும் காரணம் எனும் போது.... என்ன செய்ய முடியும்? நல்ல பதிவு.

Karthick Chidambaram சொன்னது…

சிந்திக்ககூடிய தகவல்

காமராஜ் சொன்னது…

செந்தில் அந்த நைஜீரியாப்பொண்ணு இருக்காளே இதுவரைக்கும் எனக்கு 25 மின்னஞ்சல் அனுப்பிட்டா.அதுல என்னகொடுமைனா தமிழ்மணத்தில் ஏழு ஓட்டு வாங்கக்கூட முடியாத என்ன்னோட பதிவு நைஜீரியா வரைக்கும் போயிருச்சேன்னு மிதந்து கொண்டே இருந்தேன்.மத்த யார்மேலயும் நம்பிக்கையில்ல உங்கமேல எனக்கு நம்பிக்கை இருக்குன்னு வேற எழுதியிருப்பா.
ஒரே ஒரு விஷயம் தான் எனது உழைப்பில்லாத,எனக்கு சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து எனக்கு ஏன்பணம் வரவேண்டும்.சின்ன வயசில் பொட்டிக்கடையில் தொங்கும் பரிசு அட்டயைக்கிழித்து வெரும் ப்ளாங்கி வாங்கியதோடு சரி.வாழ்க்கையில் லாட்டரிச்சீட்டைப்பிடிக்காது.ஆனால் அந்த டாக்சி விளம்பரம் பிடிக்கும் 'நம்ம கே ஏ எஸ் சேகர்தாண்ணே.கைஅராசிக்காரர்ணே.ஒரு சீட்டு வாங்குங்கண்ணே.30 ஆம் தேதிகுலுக்கல்.அப்புறம் நீங்கதான் லட்சாதிபதி. கார்லயே போலாம் கார்லயே வரலாம்'.ரொம்பப்பழக்கமான குரல்.அதும்மதிரித்தான் இந்த நைஜீரியாப்போண்ணும்.

காமராஜ் சொன்னது…

உடம்புக்கு முடியலயா செந்தில்.என்ன ? இப்போ எப்படியிருக்கு.ஈரோடு வருவீங்களா ?

ஜோதிஜி சொன்னது…

செந்தில் சுவர் இருந்தால் தான் இது போன்ற நல்ல சித்திரங்கள் வரைய முடியும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. போராவூரணி பற்றி பல முறை வியந்துள்ளேன். பலவிதங்களில்.

Butter_cutter சொன்னது…

நண்பருக்கு அனைத்தையும் விளக்கி சொன்னேன். அதன்பிறகும் அவர் என்னை நம்பாத மாதிரிதான் தெரிந்தது.

ஆடு கசாப்பு கடை கரனை தான் நம்புமாம்

good