23 பிப்., 2011

துரோணா - 6 ...


நான்தான் வீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால் செல்லம் அதிகம். எனக்கு நான்கு சகோதரிகள்,ஒரு சகோதரன், ஆனால் போகப்போகத்தான் தெரிந்தது அண்ணனுக்கே அதிக முன்னுரிமை என்று. அவனுக்கு கவுச்சி இல்லாம சோறு உள்ள இறங்காது. அதனாலே அவன் சாப்பிடும்போது மட்டும்  'கன்னிராசி' படத்துல வர்ற மாதிரி சோத்துக்குள்ள முட்டையை புதைச்சு வச்சிருப்பாங்க. அவன் எப்ப பணம் கேட்டாலும் உடனே கொடுப்பாங்க. நான் ரெண்டு ரூவா பணத்துக்கு கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சனும்.  

ஆனால் என்னோட உலகம் வேறாக இருந்தது . எப்போதும் விளையாட்டுதான் . என்னுடைய வீடு இருக்கும் தெருவில் அனேகமாக எல்லோரும் மாமாக்கள் வீடுதான். எல்லாவீட்டிலும் என்னிடம் தனிப்பாசம் கொண்டிருந்தனர்.  ஏன்னா நான் ஏறாத மரம் கிடையாது. தம்பிதான் மறுக்காம உதவி பண்ணும் என்று சொல்லியே எல்லா வேலையும் என்னிடம் வாங்கிவிடுவார்கள் தேங்கா,மாங்கா, முருங்கைக்காய் பறிக்கிறது, கடைகன்னிக்குப்போறது இப்படியாக வீட்டில் எந்த வேலையும் செய்யாத நான் எல்லோர் வீட்டிற்கும் வேலைக்காரன் ஆகிப்போனேன்..

அப்பல்லாம் நான் ஒன்னாப்பு படிக்கயில என்னக்கு மட்டும் ஒரு பலகை. பலகை என்பது பெஞ்சு அளவில் இருக்கும் ஆனால் தரையில் நாலு இன்ச் உயரத்துக்கு இருக்கிறமாதிரி செய்திருப்பார்கள். நான் மட்டும் ஒரு பலகை முழுதும்  வேணுன்னு அடம்புடிப்பேன். என்னோட கட்ட டீச்சரும் (நாங்க இப்படித்தான் கூப்புடுவோம் )எனக்கு ஒரு பலகைய  கொடுப்பாங்க. என்னோட விருப்பத்துக்குதான் ஸ்கூலுக்கு போவேன். வீட்டுக்கு வரணும்ன்னு நெனச்சா உடனே பைய தூக்கிட்டு கெளம்பிடுவேன். அப்படிதான் ஒரு நாள் வீட்டுக்கு வர்றப்ப என்னோட தாய்மாமா டேப்பன் (எல்லோரும் அவரை அப்படித்தான் கூப்பிடுவார்கள் ) பாத்துட்டு எங்கடா போறேன்னு கேட்க நானோ வயித்து வலி அதனாலே வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். அவரும் பரிதாபப்பட்டு தன்னோட சைக்கிள்ள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டாரு. ஆனா என்னோட அம்மா அவர்கிட்டே இவன் இப்படித்தான் தெனமும் எதாச்சும் சொல்லிட்டு வீட்டுக்கு வர்றான் தம்பின்னு அவரிடம் கம்ப்ளெயின்ட் பன்ன. என் அம்மா முனாடியே என்னை அடி பின்னி எடுத்துட்டார்.  அடிச்சதோட மட்டுமில்லாம என்னை திருப்பிக் கொண்டு வந்து பள்ளில விட்டுவிட்டு கட்ட டீச்சரிடம் இவன் இனி வீட்டுக்கு போறேன்னு சொன்னா எனக்கு சொல்லி அனுப்புங்க அப்புடின்னு கண்டிசன் போடவே அவரின் அடிக்கு பயந்தே  அதன்பிறகு ஒழுங்கா பள்ளிக்கு போக ஆரம்பிச்சேன் ..

அப்புறம் நான் அஞ்சாப்பு படிக்கயில என்னோட செட்டுங்க ரொம்ப பெருசாயிடுச்சு. வயசு வித்தியாசம் இல்லாம எல்லோரும் விளையாடுவோம். அப்படிதான் ஒருமுறை நாங்க எல்லோரும் சேந்து காசு சேத்தோம். பொதுவான ஒரு எடத்துல உண்டியல் புதைத்து வைக்கப்பட்டது. ஆனால் திடீரென உண்டியல் ஒருநாள் காணாமல் போனது. எல்லோரும் பரபரப்பாகி தேடிக்கொண்டு இருந்தோம். யாராவது திருடி இருக்கலாம் என்பதால் யாரெல்லாம் அதனை திருடுவதற்கான சாத்தியம் இருக்கும் என தீவிரமாக விவாதித்துக்கொண்டு இருந்தோம்.

என்னோட மாமா வீட்டு தோப்புல வெளியூருல இருந்து பிழைப்புத்தேடி வந்த ஒரு குடும்பம் இருந்தது. அந்த வீட்டு பையன் நான்தான் அந்த உண்டியல திருடியதாகவும் அதை தன் கண்ணால் பார்த்ததாகவும்சொன்னதால். எல்லோரும் என்னைக்  கூட்டி வைத்து பஞ்சாயத்து வைத்தனர். நான் எவ்வளவோ மறுத்தும் ,சத்தியம் செய்தும் யாரும் என்னை நம்பவில்லை. ஏனெனில் நான் திருடியதாக சொன்னவன் தன் அம்மாமேலும் சாமி மேலும் சத்தியம் செய்தான். 

என்னோட அம்மாவும் , சத்தி வீட்டு தாத்தாவும் மட்டும் நம்பினார்கள். சத்தி வீட்டு தாத்தா மட்டுமே எங்கள் பகுதியில் தினமணியும். துக்ளக்கும் வாங்குவார். இரண்டையும் அவர் வீட்டுக்கு சென்று படிப்பவன் நான். அவர் சிங்ககப்பூர்காரர் என்பதால் அவர் கால சிங்கப்பூர் கதைகளை சொல்லுவார். நான் அவரின் பிரியமான பேரன் என்பதால் என்மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தார். அதனால் அவரும் என் அம்மாவும் மட்டும் நான் பொய் சொல்ல மாட்டேன் எனத்திடமாக நம்பினார்கள். ஆனாலும் என் சேக்காலிங்க நம்பாததால், அம்மாவே அவர்களுக்கு அவர்கள் கணக்கு சொன்ன இருவது ரூபாயும் கொடுத்தாங்க.

அதன்பிறகு என் செட்டுங்க யாரும் என்கிட்டே பேசுறது கிடையாது . நான் கடைக்கு போகும்போதெல்லாம் என்னைபாத்து ''திருடன் போறான்னு " கத்துவாங்க. ஸ்கூல் விட்டுவந்து அவங்களோட விளையாட முடியாது. அத தவிர்ப்பதற்காக ஸ்கூல் விட்டவுடன் நூலகம் செல்ல ஆரம்பித்தேன். அப்படித்தான் நான் படிப்பாளி ஆனேன் ,

இப்படி சில மாசம் போன பின்னாடி ஒரு நாள் ஸ்கூல்ல இருக்கும்போது என்னோட அப்பா மற்றும் என்னை நான்தான் திருடினேன் என்று சொன்ன பையன் அவனோட அப்பா ,அம்மா மற்றும் அவனோட தங்கச்சி எல்லோரும் வந்து என்னை ஹெட்மாஸ்ட்டர் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க. அங்க என்னை திருடன்னு சொன்ன பையன் அவனோட தங்கச்சிய நான் கருக்கருவளால் (கதிர் அறுக்கும் அருவாள் ) வெட்டிவிட்டேன் என்று சொன்னான். ஆனால் என் வகுப்பு ஆசிரியரோ அவனை விசாரித்து கேட்டபோது அவன் நான் காலை பதினோரு மணி அளவில் வெட்டியதாக சொன்னான். அப்போது நான் பள்ளியில் இருந்ததால் அவன் என்மேல் பொய் சொல்கிறான் என்று தெரிந்து அவனோட அப்பா ,அம்மா அவன செமையா சாத்துனாங்க. 

அப்புறம் இது என்னோட செட்டுங்களுக்கு தெரிஞ்சு அவங்களும் அவன புடிச்சு அடிச்சப்பதான் தானே திருடிவிட்டு என் மேல் பழிசுமத்தியதை ஒப்புக்கொண்டான். என் சேக்காலிங்க என்கிட்டே மன்னிப்பு கேட்டு மறுபடியும் செட்டுல சேத்துகிட்டங்க. ஆனாலும் அன்றைக்கு நான் அத்தனை சொல்லியும் அவர்கள் என்னை நம்பாத காரணம் என்னக்கு உறுத்தியதால் நான் அதன்பிறகு அவர்களுடன் விளையாடுவதை தவிர்த்து விட்டேன்.

என்னோட ஆர்வம் லைப்ரரி மேல மாறிப்போனதால் என் மாமா அவரோட உறுப்பினர் அட்டையை கொடுத்து என்னையும் உறுப்பினராக சேத்துவிட்டார். அப்புறம் சத்தி வீட்டு தாத்தாவும் தன்னோட உறுப்பினர் அட்டையைக்கொடுத்தார். இப்படி ஆறு உறுப்பினர் அட்டையை வைத்து இருந்ததால் தினசரி ஒரு புத்தகம் என்கிற அளவில் படிக்க ஆரம்பித்தேன். லைப்ரரியன் என் ஆர்வத்தைப் பார்த்து எனக்கென புத்தகங்களை தேர்ந்து எடுத்து தர ஆரம்பித்தார்.

இன்றுவரைக்கும் நான்  தீவிர படிப்பளியாக நான் மாறக்  காரணமான என்னைத் திருடன் என்று குற்றம் சாட்டிய அந்தப்  பையனுக்குதான் நன்றி சொல்லணும்.

சேட்டைகள் தொடரும்....

7 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

படிப்பாளி ஆனவிதம் அருமை...

உங்க ஊர்ல நூலகம் இருந்ததால பரவாயில்லை...

சக்தி கல்வி மையம் சொன்னது…

சேட்டைகள் தொடரட்டும்...

மாணவன் சொன்னது…

நல்லாருக்குண்ணே, தொடரட்டும்.. :))

Jana சொன்னது…

உங்கள் கண்களினூடான காட்சிகளை எழுத்தக்களால் எங்களுக்கு காட்சிப்படுத்தும் நடை சூப்பர் அண்ணே.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

குற்றும் சுமத்தியர்க்கு கூட நன்றி சொல்லும் பக்குவம் எல்லோர்க்கும் வந்து விடாது..

தொடரட்டும்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமை அருமை செந்தில்.....

vasu balaji சொன்னது…

ஆஹா. நான் பேப்பர் அடுக்கி, புக்ஸ் அடுக்கி ஓசில படிச்சவன். பேக்கணக்கா படிச்ச காலம் உண்டு. அருமை செந்தில்