9 ஆக., 2013

Chennai Express...

எக்கச்சக்கமா தமிழ் படங்களை பார்ப்பவர்களா நீங்கள்?! அப்படியானால் உங்களால் சென்னை எக்ஸ்பிரஸ் மாதிரியான ஒரு படத்துக்கு சுலபமாக கதை எழுதிவிட முடியும். கே.சுபாஷும் அதைத்தான் செய்திருக்கிறார். ஷாருக்கான் மாதிரியான இந்தி சினிமாவின் டாப் ஹீரோக்களுக்கு பட்ஜெட் ஒரு பெரிய பிரச்சினை இல்லையென்பதால் பழைய கூட்ஸ் வண்டியை ஜிகினா பேப்பர் ஒட்டி ஓட்டியிருக்கிறார்கள்.

கதை என்னவென்றால், இது ரொம்ப முக்கியம் என்று நெளிபவர்கள் அடுத்த பாராவுக்கு தாவிவிடலாம். தன் தாத்தாவின் அஸ்தியை கரைக்க ராமேஸ்வரம் வருகிறார் ஷாருக்கான், ஆனால் அவர் கோவா செல்வதற்காக பிளான் போட்டு பாட்டியை ஏமாற்றி அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடலாம் என சென்னை எக்ஸ்பிரஸில் ஏறுகிறார். அடுத்த ஸ்டேஷனிலும் இறங்கிவிடுகிறார். ஆனால் ரயிலில் மறந்து வைத்துவிட்ட அஸ்தியை எடுக்க மீண்டும் ரயிலேறினால் அதனை பிடிக்க ஓடிவரும் தீபிகா படுகோன் மற்றும் சில அடியாட்களை கைதூக்கி விடுகிறார். ரயிலில் பாட்டுப்பாடி தீபிகாவிடம் நிலமையை விசாரிக்கிறார். இந்தக்காட்சியில் இது நன்றாக வந்திருக்கிறது என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போல, படத்தில் நிறைய இடங்களில் பாட்டாலே கொல்கிறார்கள். ஊரில் பெரிய தலை சத்யராஜ், இன்னொரு பெரிய பாடி வில்லனுக்கு தன் மகளான தீபிகாவை கட்டிவைக்க எடுக்கும் முயற்சிகளை தீபிகா அடிக்கடி வீட்டை விட்டு ஓடி முறியடிப்பதாக சொல்கிறார்கள். பிறகென்ன முத்து, கில்லி, அலெக்ஸ் பாண்டியன் (கார்த்தியின் மொக்கை), உத்தமபுத்திரன்( தனுஷ்) பட சீன்களை அப்படியே உருவி ரன் படத்தின் கிளைமாக்ஸை சுமாராக கிண்டி இந்தியாவின் பதினாறு மொழிகளை( அவ்வளவுதானா?) பற்றி ஆடியன்ஸுக்கு வகுப்பெடுத்து தீபிகாவை கரம்பிடித்து கடைசியாக ரஜினியின் புகழ் பாடும் பாடலுடன் படம் அப்பாடா முடிந்தது எனத்தோன்றும்.

நாயகி தமிழையும், இந்தியையும், ஆங்கிலத்தையும் அவ்வப்போது சரியாகவும் மற்ற நேரங்களில் உளறியும் வைக்கிறார் (டப்பிங் மோசம்). ஆனால் படத்தில் குடும்பத்து பெண்ணாக பிரமாதமாக இருக்கிறார். ஷாருக்கான் மொக்கை நாயகனாக காமெடியில் கலக்குகிறார். கடைசியில் சண்டை போட்டு ஜெயிக்கிறார். இவர்களுக்குள் காதல் வருவதற்காக வைக்கப்படும் காட்சிகள் ஸ்...ப்பா!!.

பிரியாமணியின் குத்தாட்டம் அமர்க்களம். படம் முழுதும் 98% தமிழ் முகங்கள் வந்து அவ்வப்போது தமிழில் வசனம் பேசி படம் தமிழ்நாட்டில் நடப்பதை உறுதிப்படுத்துகிறார்கள். சத்யராஜ் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்து போகிறார். பெரிய பாடி வில்லன் தமிழ் பேசி கொல்லுவதால் அவன் கதைப்படி தமிழ்நாட்டுக்காரன் என சொன்னால் வடக்கே இருந்து வந்து வேலை பார்க்கும் ஆட்களே நம்பமாட்டார்கள். படம் முழுதும் ஷெட்டுகளில் எடுக்கப்பட்டதால் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் பல்லிளிக்கின்றன. கதைப்படி நாயகனின் பெயர் ராகுல். படம் முழுவதுமே நாயகன் படு மொக்கையாக நடிக்க வேண்டியிருப்பதால் ஷாருக் அப்பெயரை விரும்பி தேர்ந்தெடுத்திருப்பார் போல!.  படம் ஊட்டியில் இருந்து திடீரென கடலுக்கு போவதும் அங்கே தமிழக மீனவர்கள். அல்லது திருடர்கள் இலங்கைக்கு டீசல் கடத்துகிறார்கள் என்பதும் இந்தி ரசிகர்களுக்காக என திட்டமிட்டிருக்கலாம்.

தியேட்டருக்கு வராத தலைவா- வால் திரையரங்குகளை வரும் விடுமுறை நாட்களை இப்படம் பாதி நிரப்பும் சாத்தியம் இருக்கு. மற்றபடி சென்னை எக்ஸ்பிரஸ் டைம் பாஸ் படம்.

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

கதைப்படி நாயகனின் பெயர் ராகுல். படம் முழுவதுமே நாயகன் படு மொக்கையாக நடிக்க வேண்டியிருப்பதால் ஷாருக் அப்பெயரை விரும்பி தேர்ந்தெடுத்திருப்பார் போல!.

-----------

ஹா.... ஹா... விமர்சனம் அருமை.

வவ்வால் சொன்னது…

KRPji,

//கதைப்படி நாயகனின் பெயர் ராகுல். படம் முழுவதுமே நாயகன் படு மொக்கையாக நடிக்க வேண்டியிருப்பதால் ஷாருக் அப்பெயரை விரும்பி தேர்ந்தெடுத்திருப்பார் போல!.
//

நீங்களும் இந்திப்படத்துக்குலாம் விமர்சனம் ,அதுவும் சுடச்சுடவா அவ்வ்!

அப்புறம் ராகுல் என்ற பெயர் ,ஷாருக்கின் அபிமான கதாப்பாத்திரப்பெயர், பெரும்பாலான ஷாருக் ஹிட் படங்களில் ஹீரோப்பெயர் ,ராகுல் என்றே இருக்கும்,

தில் தோ பாகல் ஹை, குச் குச் ஹோத்தா ஹை, கபி குஷி கபி ஹம்.

ஷாருக்கின் கேரக்டருக்கு படத்தில் ராகுல் என்ற பெயர் வைத்தால் படம் சூப்பர் ஹிட் என்பது இந்திப்பட செண்டிமெண்ட்.

ராகுல் விட்டால் ராஜ் என்ற பெயர் தான் வைத்துக்கொள்வார் ஷாருக் :-))

பெயர் ராசியினாலே சென்னை எக்ஸ்பிரசும் ஹிட் அடிச்சிடுச்சு :-))