20 ஏப்., 2010

”சி.சிவசேகரம்” கவிதை

என் முகத்தில் எதைக் காண்கிறாய் என வினவியது போர்
இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்
இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி
குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்
போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து
ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி
கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்
முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்
உடல் ஊனமானோரை என்றாள் ஒரு தாதி
மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி
இறக்குமதி வாய்ப்புகளை என்றான் ஒரு விநியோகஸ்தான்
விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்
மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி
பொருட்களின் தட்டுபாட்டை என்றாள் ஒரு குமரி
பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்
தரவேண்டிய என் பங்கை என நினைவூட்டினான் ஒரு சோதனைசாவடி அதிகாரி
இன்னும் விற்று முடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்
என்னுடைய கமிஷனை என்றான் ஒரு தரகன்
குண்டெறியும்  விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்
மேலெழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி
ரத்து செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்
போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி
மரித்த படையினர்க்கான உபகார நிதியை எனப்
பொறாமைபட்டான் அவனது மேலதிகாரி
என் தலைவிதியை என நொந்தாள்  அவனது மனைவி
என் நண்பனின் பிரிவை என் வருந்தினான் அவனது தோழன்
வீர மரணங்களை என்றான் ஒரு பிரசாரகன்
விடுதலையை என அடிதுரைத்தாள் ஒரு பெண் போராளி
பயங்கரவாதத்தின் முடிவை என கொக்கரித்தான் ஒரு அமைச்சன்
பைத்தியகரதனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி
பசியில் வாடும் குழந்தைகளை என பதறினாள் ஒரு தாய்
பால்க்' கான கியூ வரிசையை என்றால் ஒரு சிறுமி
போக முடியாத சாலைகளை என முறையிட்டான்
ஒரு வடக்கை வண்டியோட்டி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்
திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டாள்  ஒரு ஆசிரியை
நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்
நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி
மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்
மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என்.ஜி. ஓ. ஊழியன்
ஏராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்
என்னை என்ற குரல் வந்த திசையில்
கவனிப்பாரற்று கிடந்தது
ஒரு அகதியின் பிணம்

9 கருத்துகள்:

அருண்மொழிவர்மன் சொன்னது…

நல்ல கவிதை

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Unknown சொன்னது…

நன்றி.. அருண்மொழிவர்மன்

திரு.சி .சிவசேகரம் அவர்களின் இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது..

நாம் ஒவொருவரும் ஈழத்தை எப்படி பார்க்கிறோம் என்பதை காட்டும் கண்ணாடி இந்த கவிதை …

pichaikaaran சொன்னது…

அருமை.. கிரிக்கட்டை கவனிப்பது போல , ராணுவம் ஜெயுக்குமா, புலிகள் ஜெயிப்பார்களா என்று கவனித்த தமிழ் நாட்டு தமிழர்கள் பலர் உண்டு..

ஒரு பிரச்சினையை, அவரவர் மன நிலைக்கு ஏற்ப அவரவர் கவனிகின்றனர்...
சிந்தனையை தூண்டும் கவிதை... ஆனால், பின்னூட்டத்தை , பதிவை விட பெரிதாக்க விரும்பவில்லை..

Unknown சொன்னது…

நன்றி பார்வையாளன், நிறைய பேருக்கு இந்த போர் பற்றிய விமர்சனங்களே
விடுதலை புலிகளை பற்றிய தவறான அணுகுமுறையுடன்தான் பார்க்கப்பட்டது ..

prince சொன்னது…

//என் நண்பனின் பிரிவை என் வருந்தினான் அவனது தோழன்// போர் பற்றிய அவலத்தை காட்டியது இந்த கவிதை கண்ணாடி.. அகதியின் பிணமும் தன் முகம் பார்த்தது

பெயரில்லா சொன்னது…

சிவசேகரம் அய்யா கவிதை என்று தலைப்பிட்டுக் கட்சிக்கட்டுரைதானே வரைவார்

Unknown சொன்னது…

நன்றி பிரின்ஸ்

அருண்மொழிவர்மன் சொன்னது…

சிவசேகரம் தேவி எழுந்தாள் தொகுப்பில் “துரோகி என்று தீர்ப்பெழுதி” என்றூ தொடங்கி ஒரு கவிதை எழுதி இருப்பார். வாசித்தீர்களா,

பிரம்படி..

துரோகி எனத் தீர்த்து
முன் ஒரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக் கண்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றம் சாட்டியவனை
வழக்குரைத்தவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனை சுட்டது
தீர்ப்பை ஏற்றவனை சுட்டது
எதிர்த்தவனை சுட்டது
சும்மா இருந்தவனையும்
சுட்டது..
- சி.சிவசேகரம்
"தேவி எழுந்தாள் தொகுப்பு "
(தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு)

Unknown சொன்னது…

"பிரம்படி.."

நல்ல கவிதை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
அருண்மொழிவர்மன்