11 ஏப்., 2010

the motorcycle diaries

எனக்கு சே குவாராவை மிகவும் பிடிக்கும், அவர் செய்த பொதுசேவை இன்றுவரை யாராலும் ஈடு செய்ய முடியாதது. ஒரு மருத்துவராக தொடங்கிய அவரது பயணம் போராளியாக மாற்றம் பெற்று புரட்சியாளனாக வென்று, இன்றுவரை போராடும் ஒவ்வொரு போராளிக்கும் முன்னுதாரணமாக இருப்பவர். அவரை பற்றிய ஒரு படம்தான் the motorcycle diaries


1952 ஆம் வருடம் 23 வயதாகும் சேவும் அவரது நண்பர் ஆல்பர்டோவும் ஒரு மோட்டார் சைக்கிளில் அர்ஜென்டினா , சிலி, பிரேசில், பேரு, வெனிசுலா கிட்டத்தட்ட ஐந்தாயிரம் மைல் பயணம் மருத்துவ ஆய்வுக்காக செய்வார்கள், வழியில் அவர்கள் காணும் வறுமை, அடிமைத்தனம், சுகாதார சீர்கேடுகள் அவரை மனமாற்றம் செய்யும், அவர் ஒரு போராளியாக மாறுவதற்கு இந்த பயணம்தான் காரணம்.

படம் முழுதும் அவர்களின் பயணமும் அதனால் ஏற்படும் சிரமங்களுமாக இருக்கும், வெகு நேர்த்தியாக எடுக்கப்பட்ட இந்த படத்தை வால்ட்டர் சேல்ஸ் இயக்கியிருக்கிறார். மிகவும் தரமான படைப்பு.

நான் எப்போதாவது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் செல்வேன். அப்படி சமீபத்தில் 1050 கிலோமீட்டர் பயணம் செய்தேன், மிகுந்த சுவாரஸ்யமான பயணம் அது, அதிகாலை சென்னையில் இருந்து நானும் நண்பர் சரவணனும் கிளம்பினோம். காலை எட்டு மணிக்கு சேத்தியாதோப்பு வந்துவிட்டோம். வழியில் ஒரு சிறிய ஹோட்டலில் இருவரும் ஆளுக்கு எட்டு இட்லியும் இரண்டு வடையும் சாப்பிட்டோம், மொத்தமே 26 ரூபாய்தான், மதிய சாப்பாடு மன்னார்குடியில் அவ்வளவு நன்றாக இல்லை, அப்படியே சொந்த ஊருக்கு போய் நண்பர்களையும், அப்பா, அம்மாவையும் பார்த்துவிட்டு, மதுக்கூர் வந்து நண்பர்களையும், அண்ணி, குழந்தைகளையும் பார்த்துவிட்டு முத்துபேட்டை வந்தோம், வழியெங்கும் வயல்காடுகள், அது நண்பர் சரவணன் மகிழ்ச்சியாக்கியது.

அன்று இரவு இடும்பாவனம் பாலா அண்ணன் வீட்டில் தங்கினோம், அங்கு இரவு அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தேன் , மிகுந்த பாசம் கொண்டவர் கடின உழைப்பாளி, அவரிடம் பேசினால் நேரம் போவதே தெரியாது. முன்பெல்லாம் அங்கு போனால் இரண்டு நாட்கள் தங்குவேன், இப்போது நிறைய வேலை இருந்ததால் மறுநாள் காலையே கிளம்பிவிட்டோம்.

அங்கிருந்து பட்டுக்கோட்டை வந்தோம், எங்களை ஏமாற்றிய ஞானசேகரை பார்க்கத்தான் வந்தோம், எங்களுடன் அருமலை நண்பர் செந்திலும், தம்பி ராஜேசும் கலந்து கொண்டனர். ஒரு வழியாக ஞானசேகர் வந்தவுடன் அவனைப்பார்த்து கொடுக்கவேண்டிய பணத்துக்கு எழுதி வாங்கிக்கொண்டோம். அவனை அனுப்பிவிட்டு சாப்பிட போனோம், காமாட்சி மெஸ் என்ற உணவகத்துக்கு கூட்டிச்சென்றனர், மிக அற்புதமான சாப்பாடு, நீங்கள் பட்டுக்கோட்டை சென்றால் அங்கு போய் சாப்பிடுங்கள்.

அடுத்து நண்பர்களை அனுப்பிவிட்டு கந்தர்வக்கோட்டை வந்தோம், அங்கு நண்பர் ரமேஷ் இருக்கிறார், சுமார் 350 ஏக்கரில் முந்திரி பயிரிட்டு அதன் நடுவில் உள்ள பண்ணைவீட்டில் இருக்கிறார். மிகவும் அமைதியான அந்த இடத்தில் அன்று இரவு தங்கி, மறுநாள் காலை தஞ்சை வந்தோம், நான் எப்போது தஞ்சை வந்தாலும் பெரிய கோவிலுக்கு போகாமல் வந்ததில்லை. இப்போதும் அங்கு சென்று கருவூரார் சன்னதியில் அரைமணி நேரம் தியானம் செய்தேன், பின் அரண்மனை வந்து ஆர்ட் கேலரிக்கு போனோம், எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கமே இதுதான் 50 ரூபாயில் இருந்து 5 இலட்சம் வரைக்குமான கலைபொருட்களை செய்பவர்களை பார்த்து, அவர்களின் தயாரிப்புகளை உலக அளவில் கொண்டு செல்வது.

அதன் பின் சுவாமிமலைக்கு கிளம்பினோம், மழை பிடித்துகொண்டது, அரைமணி நேரம் நல்ல மழை, கோடை சிரமத்தில் இருந்த விவசாயிகளுக்கு அந்த மழை ஒரு வரம் என்பதாய் அருகில் நின்ற விவாசாயிகள் பேசிக்கொண்டனர். மழைவிட்டவுடன் சுவாமிமலை வந்து நண்பர் ரவியை சந்தித்தோம், அவர் பல்வேறு சிலை தயாரிப்பாளர்களிடம் அழைத்துசென்றார், அனைவரும் எங்கள் திட்டத்தில் மிக ஆர்வமாக இருந்தனர். மாலை மூன்று மணிக்கு அங்கிருந்து கிளம்பி அணைக்கரை வந்தோம், அங்கு டேப் தங்கராசு உணவகத்தில் சாப்பிட்டோம், மிக அருமையான, சுவையான, மலிவான மீன் சாப்பாடு, நீங்கள் அணைக்கரை வழியாக சென்றால் மறக்காமல் சென்று சாப்பிடுங்கள்.

அதன்பின் அங்கிருந்து சென்னை கிளம்பி இரவு எட்டரைக்கு வீடு வந்து சேர்ந்தோம். மிக அற்புதமான பயணம், வாய்ப்பு கிடைத்தால் இன்னொருமுறை தஞ்சை( பழைய ஒருங்கிணைந்த) கோவில்களை சென்று ஆய்வு செய்யலாம் என்றிருக்கிறேன், அப்போது மிக விரிவான தகவல்களை தருகிறேன்.

5 கருத்துகள்:

pichaikaaran சொன்னது…

"1050 கிலோமீட்டர் பயணம் செய்தேன், மிகுந்த சுவாரஸ்யமான பயணம் அது"

பலர் பயணத்தை சுமையாக நினைக்கும் நிலையில், அனுபவித்து எழுதி இரிக்கிரஈர்கள்.... நானும் பயணத்தை ரசிப்பவன், பல இடங்களை நேசிப்பவன் என்ற முறையில், உங்கள் உணர்வுகளை என்னாலும் , இந்த கட்டுரை மூலம் உணர முடிந்தது...

ஆனால், இது போன்ற அனுபன் எனக்கு இதிவரை கிடைக்கவில்லை என்ற வகையில், லேசான பொறமை எட்டி பார்ப்பதை தடுக்க முடியவில்லை ( பாராட்டக சொல்லவில்லை.. உண்மையிலேயே பொறாமையாக இருக்கிறது )

பரவாயில்லை, மேலும் எழுதுங்கள்.... ( குறிப்பாக தஞ்சை சென்று வந்தால் அதை பற்றி_ )

Unknown சொன்னது…

நிச்சயம் எழுதுவேன் நண்பரே...
வருகைக்கு நன்றி ...

மன்னார்குடி சொன்னது…

//வழியெங்கும் வயல்காடுகள், அது நண்பர் சரவணன் மகிழ்ச்சியாக்கியது.//

இன்னமும் நம்மூரு பக்கம் தான் இப்படி அதிகம் பாக்க முடியுது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி நண்பா ...

ராஜ நடராஜன் சொன்னது…

தொடர் வாசிப்பின் மகிழ்வாக பாராட்டுக்களை இங்கே பதிவு செய்கிறேன்.